தமிழகம்

விவசாயிகளை அதிருப்தியில் ஆழ்த்திய முதல்வர் ஸ்டாலினின் ஈரோடு பரப்புரை

எஸ்.கோவிந்தராஜ்

ஈரோடு: கீழ்பவானி, காலிங்கராயன் வாய்க்கால் பாசனம் குறித்து தனது பிரச்சாரத்தில் முதல்வர் கூறிய தவறான தகவல்கள், ஈரோடு மாவட்ட விவசாயிகள் மத்தியில் குழப்பத்தையும், அதிருப்தியையும் ஏற்படுத்தியுள்ளது.

மக்களவைத் தேர்தல் பிரச்சாரத்தில் திமுக தலைவரும், முதல்வருமான மு.க.ஸ்டாலின் தீவிரமாக ஈடுபட்டுள்ளார். அவர் செல்லும் இடங்களில் எல்லாம், காலை நேரத்தில் காய்கறிச்சந்தை போன்ற இடங்களில் பொதுமக்களுடன் நேரடி சந்திப்பு, மாலையில் பொதுக்கூட்டம் என்று நிகழ்ச்சி நிரல் வடிவமைக்கப்பட்டுள்ளது. அந்த வகையில், சேலம் மற்றும் ஈரோட்டில் நடந்த பிரச்சாரக் கூட்டங்களில் மு.க.ஸ்டாலின் பங்கேற்று, பிரச்சாரத்தை நிறைவு செய்துள்ளார். ஈரோடு பிரச்சாரத்தில் முதல்வர் ஸ்டாலின், ஈரோடு மாவட்டத்தின் மூன்று முக்கிய பிரச்சினைகள் குறித்து தெரிவித்த கருத்துகள், விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் குழப்பத்தையும், அதிருப்தியையும் ஏற்படுத்தியுள்ளது.

பொய்யான தகவல்கள்: இது குறித்து காலிங்கராயன் பாசனசபை தலைவர் வேலாயுதம் கூறியது: "ஈரோடு மாவட்டத்தில் ஓடும் காலிங்கராயன் வாய்க்காலில் சாயக்கழிவு நீர் கலப்பதை திமுக அரசு தடுத்துள்ளது என முதல்வர் பிரச்சார பொதுக்கூட்டத்தில் பேசியுள்ளார். அதோடு, காலிங்கராயன் வாய்க்கால் கரைப்பகுதியில் இருந்த சாய, தோல் ஆலைகள் பெருந்துறை சிப்காட் தொழில் வளாகத்துக்கு மாற்றப்பட்டது.

1996-ம் ஆண்டு திமுக ஆட்சியில், ரூ. 100 கோடி மதிப்பீட்டில் காலிங்கராயன் வாய்க்கால் வலது கரைப்பகுதி தரைத்தளம் அமைத்து வாகனங்கள் சென்று வரும் வகையில் வடிவமைக்கப்பட்டது. இதனால், கால்வாயின் வலது கரைப் பகுதியில் இருக்கும் ஆலைகள் கழிவுநீரை வெளியேற்ற முடியாமல், தடுத்து நிறுத்தப்படடு, தெளிவான நீர்ப்பாசனம் பெற்று வருகிறது" என்றெல்லாம் பிரச்சாரத்தில் முதல்வர் ஸ்டாலின் பேசியுள்ளார்.

இவையெல்லாம் பொய்யான தகவல்களாக உள்ளன. அதிமுக ஆட்சியில் கே.வி.ராமலிங்கம் பொதுப்பணித் துறை அமைச்சராக இருந்த போது, காலிங்கராயன் கால்வாயில் கான்கிரீட் தளம் அமைக்கப்பட்டது. காலிங்கராயன் கால்வாயை ஒட்டிய எந்த சாய, சலவை, தோல் தொழிற்சாலையும், பெருந்துறை சிப்காட் தொழிற்பேட்டை வளாகத்திற்கு இதுவரை மாற்றப்படவில்லை. காலிங்கராயன் கால்வாயில் சாயக்கழிவுகள் கலந்து, நீர் மாசடைவது தொடர்ந்து வருகிறது. ஒவ்வொரு விவசாயிகள் குறைதீர் கூட்டத்திலும் தொடர்ந்து பேசி வருகிறோம்.

காலிங்கராயன் பாசனசபை தலைவர் வேலாயுதம்

மேலும், இது காலிங்கராயன் பாசன விவசாயிகள், ஈரோடு மாவட்ட மக்கள் அனைவருக்கும் தெரிந்த உண்மை. தேர்தல் பிரச்சாரம் என்பதற்காக, முதல்வர் இதுபோன்ற உண்மைக்கு மாறான தகவல்களைப் பேசியிருப்பது வருத்தமளிக்கிறது" என்று அவர் கூறினார்.

பாசனப்பரப்பில் குழப்பம்: கீழ்பவானி பாசன விவசாயிகள் நலச்சங்க தலைவர் நல்லசாமி கூறியது: "கீழ்பவானி பாசனம் மூலம் 1 லட்சத்து 3500 ஏக்கர் நன்செய் பாசனமும், 1 லட்சத்து 3500 புன்செய் பாசனம் என மொத்தம் 2 லட்சத்து 7000 ஏக்கர் பாசனம் பெறுகிறது. இது நீர்வளத்துறை ஆவணத்தில் உள்ள தகவல். இதோடு, கீழ்பவானி வாய்க்கால் கசிவு நீர் மூலம் 30 ஆயிரம் ஏக்கர் வரை பாசனம் பெற்று வருகிறது.

ஆனால், முதல்வர் மு.க.ஸ்டாலின் பிரச்சாரத்தில் பேசும்போது, "கீழ்பவானி வாய்க்கால் மூலம் நேரடியாக 3 லட்சம் ஏக்கர் நேரடி பாசனமும், கசிவு நீர் மூலம் 5 லட்சம் ஏக்கர் நிலம் பாசனம் பெறுவதாகவும் குறிப்பிட்டுள்ளார். இது போன்ற அடிப்படைத் தரவுகளே முதல்வருக்கு தெரியாத நிலையில், பவானிசாகர் அணையின் தவறான நிர்வாகம், கள் இறக்க அனுமதி போன்ற விவசாயிகளின் பிரச்சினைகளை முதல்வர் எப்படி உள்வாங்கி, அதற்கு நடவடிக்கை எடுக்கப் போகிறார் என்று புரியவில்லை" என்று அவர் தெரிவித்தார்.

அத்திக்கடவு - அவிநாசி திட்டம்: இதேபோல், அதிமுக ஆட்சியில் 90 சதவீதம் நிறைவடைந்த அத்திக்கடவு - அவிநாசி திட்டம் கடந்த 3 ஆண்டுகளாக பயன்பாட்டுக்கு வராததால் விவசாயிகள் அதிருப்தியில் உள்ளனர். இந்த திட்டம் குறித்து ஸ்டாலின் பேசும்போது, ‘அத்திக்கடவு - அவிநாசி திட்டத்துக்கு தண்ணீர் எடுக்கும் நிலையம் இருக்கும் பகுதியை கடந்த ஆட்சியில் கையகப்படுத்தாமல் விட்டுவிட்டனர்’ என்று குறிப்பிட்டு, அதனால் தான் திட்டம் தாமதமானதாக குறிப்பிட்டுள்ளார்.

அத்திக்கடவு - அவிநாசி திட்டத்துக்கான நீர் ஆதாரம் இல்லை என்ற உண்மையை மறைத்து, கடந்த 3 ஆண்டு காலமாக திட்டம் 98 சதவீதம் முடிந்து விட்டது என்று தொடர்ந்து கூறி, திமுக அரசு காலம் தாழ்த்தி வருவதாக விவசாயிகள் குற்றஞ்சாட்டுகின்றனர். இதனை மறைக்கும் வகையில் முதல்வர் ஸ்டாலினுக்கு தவறான தகவல் தரப்பட்டு, அவர், அதனை பிரச்சாரத்தில் பேசியுள்ளார் என்கின்றனர் விவசாயிகள்.

கீழ்பவானி பாசன விவசாயிகள் நலச்சங்க தலைவர் நல்லசாமி

ஜெயலலிதா மீதான குற்றச்சாட்டு: அதேபோல், சேலத்தில் நடந்த பிரச்சார கூட்டத்தில் பேசிய முதல்வர் ஸ்டாலின், ‘எம்ஜிஆரையும் ஜெயலலிதாவையும் பிரதமர் மோடி புகழ்ந்து பேசுகிறார். ஜெயலலிதா ஆட்சியில் இருந்தபோது, தமிழகத்தில் உள்கட்டமைப்பு வசதி ஏற்படாததற்கு ஒரு பெண்தான் காரணம் என்று மோடி பேசவில்லையா’ என்ற குற்றச்சாட்டை முன் வைத்துள்ளார்.

இது குறித்து பாஜக நிர்வாகிகள் கூறும்போது, “கடந்த 2014-ம் ஆண்டு பிரதமர் மோடி தனது பிரச்சாரத்தில் பேசியதை ஸ்டாலின் தவறாக அர்த்தப்படுத்துகிறார். 2014-ம் ஆண்டு ஈரோட்டில் நடந்த பிரச்சாரக் கூட்டத்தில் பிரதமர் மோடி பேசும்போது, ‘தமிழகத்தின் பல கட்டமைப்பு திட்டங்கள் தாமதமாவதற்கு தமிழகத்தைச் சேர்ந்த ஒரு பெண் தான் பொறுப்பு என்பதை வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறேன்.அந்த பெண் காங்கிரசைச் சார்ந்தவர். அவர்தான் தமிழகத்துக்கும், நாட்டுக்கும் பெரிய இழப்பை ஏற்படுத்தியுள்ளார். அவர் மக்களால் தேர்ந்தடுக்கப்பட்டவர் அல்ல. ராஜ்யசபா தேர்தல் மூலமாக வெற்றி பெற்றவர் அவர்.

பசுமை பாதுகாப்பு என்ற பெயரில் திட்டங்களை அவர் முடக்கி விட்டார். பசுமை, சுற்றுச்சூழல் என்ற பெயரில், 'ஜெயந்தி டேக்ஸ்' என்ற வரி மூலம் நாட்டை விற்று விட்டனர். 'ஜெயந்தி டேக்ஸ்' வரி என்றால் உங்களுக்கே தெரியும்’ என்று விளக்கமாக தெரிவித்துள்ளார். அப்போது மத்திய அமைச்சராக இருந்த ஜெயந்தி நடராஜன் தான் தமிழகத்துக்கான திட்டங்களைத் தடுத்தவர் என்ற பிரதமர் குறிப்பிட்ட நிலையில், அதனை மாற்றி பிரதமர் ஜெயலலிதா குறித்து பேசியதாக ஸ்டாலின் பேசுவது, வரலாற்றை திரிப்பதாகும்” என்று அவர்கள் தெரிவித்தனர்.

பொதுவாக தலைவர்களின் பரப்புரை தயாரிப்பு பணிக்கென ஒரு குழு நியமிக்கப்பட்டு, அவர்கள் தலைவர்களின் பேச்சினை வடிவமைத்து தருவது வழக்கமாக உள்ளது. அந்த வகையில், முதல்வர் பதவியில் உள்ளவரின் பேச்சுகளை வடிவமைக்கும் குழுவுக்கு, தரவுகளை உறுதிப்படுத்திக் கொள்ள பல வாய்ப்புகள் எளிதாக கிடைக்கும். அப்படி இருந்தும், அடிப்படை விஷயங்களில் கூட கவனமின்றி, முதல்வரின் உரையைத் தயாரித்து இருக்கின்றனர். இது அவசியம் சரிப்படுத்திக் கொள்ள வேண்டிய தவறு என்கின்றனர் அரசியல் வட்டாரத்தை நன்கறிந்தவர்கள்.

SCROLL FOR NEXT