இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேர்தல் அறிக்கை சென்னையில் நேற்று வெளியிடப்பட்டது. இதில் மூத்த தலைவர் நல்லகண்ணு, தேசிய குழு உறுப்பினர் வெங்கடாசலம், மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். | படம்: எஸ்.சத்தியசீலன் | 
தமிழகம்

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தேர்தல் அறிக்கை வெளியீடு

செய்திப்பிரிவு

சென்னை தி.நகரில் உள்ள இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில அலுவலகத்தில் கட்சியின் தேர்தல் அறிக்கையை மூத்த தலைவர் நல்லகண்ணு நேற்று வெளியிட்டார். அதை தேசிய நிர்வாகக் குழு உறுப்பினர் சி.எச்.வெங்கடாசலம் பெற்றுக் கொண்டார்.

நிகழ்ச்சியில் மாநில செயலாளர் முத்தரசன் மற்றும் மாநில நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.தேர்தல் அறிக்கையின் விவரம்: விவசாய விளைபொருட்களுக்கு லாப விலை வழங்குவதை சட்டப்பூர்வமாக உறுதி செய்ய வேண்டும். அனைத்து பயிர்களுக்கும் உள்ளடங்கிய பயிர் காப்பீட்டுத் திட்டத்தை உருவாக்கி, காலதாமதம் இன்றி இழப்பீடு வழங்க வேண்டும்.

பகத்சிங் தேசிய வேலை உறுதிச் சட்டம் இயற்ற வேண்டும். தேசிய இளைஞர் கொள்கை உருவாக்க வேண்டும். பெண்களுக்கு எதிரான குற்றங்களை விரைந்து விசாரிக்க விரைவு நீதிமன்றங்களின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும். வேலைவாய்ப்பில் 33 சதவீதம் பெண்களுக்கு கிடைக்க சட்டம் இயற்ற வேண்டும்.

அனைவருக்கும் ஆரம்பக் கல்வி முதல் 12-ம் வகுப்பு வரை இலவசக் கல்வி வழங்குவதோடு, அதை கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் கொண்டு வர வேண்டும். இந்த கோரிக்கைகளை நிறைவேற்ற நாடாளுமன்றத்துக்கு உள்ளேயும், வெளியேயும் போராட்டத்தை நடத்தும் என இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி உறுதி கூறுகிறது. இவ்வாறு தேர்தல் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT