சென்னை: இந்திய தேசிய காங்கிரஸ் கட்சிக்கு ரூ.1,823 கோடி வரி நிலுவைசெலுத்தக்கோரி நோட்டீஸ் அனுப்பிய மத்திய அரசு மற்றும் வருமானவரித் துறையை கண்டித்து தமிழ்நாடு காங்கிரஸ் சார்பில் சென்னை வள்ளுவர் கோட்டத்தில நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் வங்கி கணக்கை கடந்த பிப்ரவரி மாதம் வருமானவரித் துறை முடக்கியது. இந்நிலையில், ரூ.1823 கோடி வரி நிலுவை, அபராதம் செலுத்த வேண்டும் என்று வருமானவரித் துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது. இதைக் கண்டித்து தமிழ்நாடு காங்கிரஸ் சார்பில் சென்னை வள்ளுவர் கோட்டத்தில், மாநிலத் தலைவர் செல்வப்பெருந்தகை தலைமையில் நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இதில் ஏராளமான காங்கிரஸ் தொண்டர்கள் பங்கேற்று, மத்திய பாஜக அரசு, பிரதமர் மோடி மற்றும் வருமானவரித் துறைக்கு எதிராக கண்டன முழக்கங்களை எழுப்பினர். ஆர்ப்பாட்டத்தில் செல்வப்பெருந்தகை பேசியதாவது: அமலாக்கத் துறை, வருமானவரித்துறை, சிபிஐ மூலம் சோதனைகள் நடத்தி எதிர்க்கட்சியினரை மத்தியபாஜக அரசு மிரட்டி வருகிறது. இந்திய வரலாற்றில் முதல்முறையாக ஐ.நா. மன்றம் இந்தியாவை கண்டித்திருப்பது மோடியின் ஆட்சியில்தான். காங்கிரஸ் கட்சியின் வங்கி கணக்கு முடக்கப்பட்டது, அபராதம் விதித்ததை ஐ.நா. மன்றம் கேள்வியெழுப்பியுள்ளது. எந்த சட்டத்தின் அடிப்படையில் வருமானவரித் துறை அபராதம் விதிக்கிறது.
பாஜக இந்த தேர்தலில் மிகப்பெரிய தோல்வியை தழுவும். ஆட்சி மாற்றம் ஏற்படும்போது, பாஜகவுக்கு முறையாக வருமான வரி தாக்கல் செய்யாததற்கு ரூ.4 ஆயிரத்து 614 கோடி அபராதம் விதிக்கப்படும். இவ்வாறு அர் பேசினார்.
சீனாவுக்கு தாரைவார்ப்பு: பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், கச்சத்தீவு வரலாற்றை பிரதமர் மோடி படிக்க வேண்டும். ஒன்றை கொடுத்து ஒன்றை பெறும்முறையில் கச்சத்தீவு கொடுக்கப்பட்டது. லடாக்கில் லட்சக்கணக்கான நிலங்களை சீனாவிடம் பிரதமர் மோடி தாரை வார்த்துள்ளார். அதற்கு வெள்ளை அறிக்கை கொடுக்க வேண்டும். கச்சத்தீவு குறித்து பேசுவதற்கு பாஜகவுக்கு தகுதி இல்லை.
கடந்த 10 ஆண்டுகளாக கச்சதீவை மீட்பதற்கு பாஜகஎன்ன நடவடிக்கை எடுத்தது. மிகப்பெரிய ஆளுமை என கூறிக்கொள்ளும் மோடி ஏன் கச்சத்தீவை இதுவரை மீட்கவில்லை என்றார்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட தலைவர்கள் சிவ.ராஜசேகரன், எம்.எஸ்.திரவியம், முத்தழகன், அடையாறு துரை, இலக்கிய அணி தலைவர் புத்தன், பொதுச்செயலாளர் தளபதி பாஸ்கர் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.