திருச்சி: திருச்சியில் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை உட்பட 700 பேர் மீது தேர்தல் விதிமீறல் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
பாஜக மாநில தலைவர் கே.அண்ணாமலை நேற்று முன்தினம் பெரம்பலூரில் பிரச்சாரத்தை முடித்துக் கொண்டு திருச்சிக்கு இரவு 10 மணிக்கு மேல் வந்தார். அப்போது திருச்சி தென்னூரில் கூட்டணி கட்சியான அமமுக வேட்பாளர் செந்தில்நாதனை ஆதரித்து,இரவு 10.15 மணிக்கு அண்ணாமலை பிரச்சாரம் மேற்கொண்டார்.
இந்த செயல் தேர்தல் விதிமீறல் என்பதால், இதுகுறித்து தில்லைநகர் காவல்நிலையத்தில், மாவட்ட நிலையான கண்காணிப்புக்குழு அலுவலர் முருகேசன்புகார் அளித்தார். அதன்பேரில், பாஜக மாநிலத்தலைவர் கே.அண்ணாமலை, மாவட்டச் செயலாளர் காளீஸ்வரன், பாமக மாவட்டச் செயலாளர் உமாநாத், அமமுக மாவட்டச்செயலாளர் ராஜசேகர், அமைப்புச் செயலாளர் சாருபாலா தொண்டைமான் உட்பட 700 பேர் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.