கோவை: சென்னை முகப்பேர் மேற்கு பகுதியைச் சேர்ந்தவர் ரகுராமன் (60). இவர் தனது நண்பர்களுடன் கோவை மாவட்டம் பூண்டி வெள்ளியங்கிரி மலைக்கு நேற்றுமுன்தினம் வந்தார். ஐந்தாவது மலை ஏறிக் கொண்டிருந்தபோது, அவருக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டது. இதையடுத்து அவரது நண்பர்கள் வனத் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.
உடனடியாக சுமை தூக்கும் தொழிலாளர்கள் மூலம் அவரை மலையடிவாரத்துக்கு தூக்கிவந்தனர். அங்கு தயாராக இருந்த 108 ஆம்புலன்ஸ் மருத்துவக் குழுவினர் அவரைப் பரிசோதித்தபோது, ரகுராமன் உயிரிழந்தது தெரியவந்தது.
நடப்பாண்டு வெள்ளியங்கிரி மலை ஏறிய பக்தர்களில் இதுவரை 6 பேர் உயிரிழந்துள்ளனர். குறிப்பாக, மார்ச் மாதத்தில் மட்டும் 5 பேர் உயிரிழந்தனர். மருத்துவரை சந்தித்து முழு உடல் பரிசோதனை செய்தபின்னரே, வெள்ளியங்கிரி மலைக்குச் செல்ல வேண்டும் என்று வனத் துறையினர் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.