சென்னை: ரயில்கள் மீது கல் வீசியது தொடர்பாக சென்னை ரயில்வே கோட்டத்தில் இந்த ஆண்டில் 20 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். ரயில் மீது கல் வீசுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று சென்னை ரயில்வே கோட்ட அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
சென்னை கோட்டத்தின் சில மார்க்கங்களில் விரைவு ரயில்கள் மீது கற்கள் வீசிய சம்பவங்கள் சமீபத்தில் நடந்தன. அப்பகுதிகளில் ரயில்வே பாதுகாப்புப் படையினர், தமிழக ரயில்வே போலீஸார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர். ரயில்கள் மீது கற்களை வீசுவது, ரயில்வே சட்டம் 1989 பிரிவு 153 மற்றும் 154-ன் கீழ்குற்றம் ஆகும். இதற்கு 5 ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்கப்படும்.
கடந்த மார்ச் 23-ம் தேதி மயிலம் - பேரணி ரயில் நிலையங்களுக்கு இடையே சோழன் விரைவுரயில் மீது சிலர் கல் வீசினர். இதுதொடர்பாக 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். பெரும்பாலான நேரங்களில், தண்டவாளம் அருகே விளையாடும் சிறுவர்களே, விளையாட்டாக ரயில் மீது கற்களை எறிகின்றனர்.
சென்னை கோட்டத்தில் கடந்த ஆண்டில் மொத்தம் 78 கல்வீச்சு சம்பவங்கள் பதிவு செய்யப்பட்டு, 76 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த ஆண்டு 15 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 20 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், ரயில்கள் மீது கல்வீசப்படுவதற்கு எதிரான விழிப்புணர்வு பிரச்சாரத்தை சென்னை கோட்ட ரயில்வே பாதுகாப்புப்படை தீவிரப்படுத்தியுள்ளது.
ரயில்வே பாதுகாப்புப் படையினர் இதுகுறித்து சிறுவர்கள் மற்றும் பெற்றோருக்கு ஆலோசனை வழங்குவதுடன், ரயில் மீது கல் வீசுவதால் ஏற்படும் பாதிப்புகள், பயணிகளின் பாதுகாப்பில் ஏற்படும் விளைவுகள் குறித்து பொதுமக்கள், பயணிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர். ரயில் மீது கல்வீச்சு சம்பவத்தில் ஈடுபட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது என சென்னை ரயில்வே கோட்ட அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.