திண்டுக்கல் தொகுதி செம்பட்டி அருகே பாளையங்கோட்டை கிராமத்தில் வடை சுட்டு வாக்கு சேகரித்த பாமக வேட்பாளர் திலகபாமா. 
தமிழகம்

“பாரதத்தை தலைநிமிரச் செய்தவர் மோடி!” - பிரச்சாரத்தில் வடை சுட்ட பாமக வேட்பாளர் திலகபாமா

செய்திப்பிரிவு

திண்டுக்கல்: ஆத்தூர் சட்டப்பேரவைத் தொகுதியில் போட்டியிட்டபோது கைவிட்ட மாதிரி இந்த முறை கைவிடாமல் எனக்கு வாக்களியுங்கள் என பனியாரம் சுட்டுக்கொடுத்து பாமக வேட்பாளர் திலகபாமா பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.

திண்டுக்கல் மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட ஆத்தூர் தொகுதியில் பாஜக கூட்டணி சார்பில் போட்டியிடும் பாமக வேட்பாளர் ம.திலகபாமா நேற்று கிராமம் கிராமமாகச் சென்று வாக்குக் கேட்டார். செம்பட்டி அருகே பாளையங்கோட்டை, போடிக்காமன்வாடி, அய்யங்கோட்டை, அய்யம் பாளையம், சித்தரேவு, சித்தையன் கோட்டை, ஆத்தூர் உள்ளிட்ட கிராமங்களில் கூட்டணிக் கட்சியினருடன் மக்களைச் சந்தித்து ஆதரவு திரட்டினார்.

பாளையங்கோட்டை கிராமத்தில் பிரச்சாரத்தில் ஈடுபட்ட போது சாலையோரம் வடை, பனியாரம் சுட்டு விற்பனை செய்த பெண்ணிடம் சென்று ஆதரவு திரட்டினார். அப்போது வேட்பாளர் திலகபாமா தானே பனியாரம், வடை சுடும் பணியில் ஈடுபட்டார். வடை சுட்டுக்கொண்டே அங்கிருந்தவர்களிடம் பேசிய வேட்பாளர் திலகபாமா, மக்களுக்கு வேண்டும் என்ற திட்டங்களை, பாரதத்தை தலை நிமிரச் செய்த பிரதமர் மோடியிடம் இருந்து கூட்டணிக் கட்சியான எங்களால் மட்டுமே பெற்றுத் தர முடியும்.

கடந்த முறை மாதிரி விட்டு விடாதீர்கள், உங்களுடன் இருக்க வேண்டும் அல்லவா, எனவே, இந்த முறை கண்டிப்பாக எனக்கு வாக்களியுங்கள் என்றார். கடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் ஆத்தூர் தொகுதியில் போட்டியிட்டு வெற்றிவாய்ப்பை இழந்தவர் திலகபாமா என்பது குறிப்பிடத்தக்கது. பிரச்சாரத்தின் போது திண்டுக்கல் கிழக்கு மாவட்டத் தலைவர் தனபாலன் உள்ளிட்ட பாஜக, பாமக நிர்வாகிகள் உடன் சென்றனர்.

SCROLL FOR NEXT