கடலூர்: சிதம்பரம் காந்தி சிலை அருகே மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நாடாளுமன்றத் தேர்தல் அரசியல் விளக்கப் பொதுக்கூட்டம் நேற்று முன்தினம் இரவு நடைபெற்றது. சிதம்பரம் நகர செயலாளர் ராஜா தலைமை தாங்கினார்.
இதில் சிறப்பு அழைப்பாளராக கட்சியின் மத்தியக் குழு உறுப்பினர் உ.வாசுகி கலந்து கொண்டு பேசியதாவது: கடந்த10 ஆண்டுகால பாஜக ஆட்சியின் அராஜகங்கள், அட்டூழியங்களின் ஒரு பகுதியாக, தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை பிதற்றல் நிறைந்த பேச்சுக்கள் பேசி வருகிறார். இதெல்லாம் ஏதோ உளறல் ஜோக் என்று கடந்து போய் விடக்கூடாது. நாடு முழுவதும் இஸ்லாமியர்களும், கிறிஸ்தவர்களும் குறிவைத்து தாக்கப்படுகிறார்கள்.
இது தான் இந்த அரசின் சாதனை. நாடு முழுக்க பல்வேறு இடங்களில் பட்டியலின, பழங்குடியின மக்கள் பல்வேறு பாதிப்புகளுக்கு உள்ளாகிறார்கள். பெண்கள்,குழந்தைகள் கடுமையான வன்முறைக்கு உள்ளாக்கப் படுகிறார்கள். பாஜக தலைவர்கள் அங்கெல்லாம் போகிறார்களா? ஆனால் இந்த மேடையில் உள்ள எல்லா கட்சிகளும் வன்முறை நடக்கக்கூடிய இடங்களுக்கு போகிறோம். அங்கெல்லாம் நீதிக்காக குரல் கொடுக்கிற ஏற்பாடுகளை தொடர்ச்சியாக நாம் செய்து கொண்டிருக்கிறோம். மோடி தலைமையிலான ஆட்சி வன்முறைகளை தூண்டி விடுகிறது.
வன்முறை செய்யக் கூடிய குற்றவாளிகளை போற்றிப் பாது காக்கிறது. இன்று வரை பற்றி எரிந்து கொண்டிருக்கக் கூடிய மணிப்பூர் பக்கம் மோடி தலை வைத்து கூட படுக்கவில்லை. அங்கெல்லாம் வன்முறை நடக்க வில்லையா? அது அண்ணாமலை கண்ணுக்கு தெரியவில்லையா? அல்லது மத்திய அமைச்சர்களுடைய கண்ணுக்கு தெரியவில்லையா? மல்யுத்த வீராங்கனைகள் பாலியல் ரீதியில் துன்புறுத்தப்பட்டு டெல்லி வீதியில் போராடினார்கள். இதில் சம்பந்தபட்ட பாஜக தலைவர்களில் ஒருவர் பிரிட்ஜ் பூஷன் சரண் சிங் எம்.பி மீண்டும் மக்களவைத் தேர்தலில் பாஜக வேட்பாளராக நிறுத் தப்பட்டு இருக்கிறார்.
பாஜக அரசு எதிர்க்கட்சி தலைவர்களை வேட்டையாடிக் கொண்டிருக்கிறது. அமலாக்கத் துறையை இதற்கு ஆதரவாக பயன்படுத்துகிறது. பாஜக மீண்டும் ஆட்சிக்கு வரக்கூடாது. கருப்பு சட்டங்களின் கீழ் சமூக செயல்பாட்டாளர்களை கைது செய்வதில் உலகளவில் இந்தியா முதலில் உள்ளது. உயிர் வாழ அத்தியாவசிய உணவுப் பொருட்களுக்கு ஜிஎஸ்டி வரி போட்ட மகா பெரிய கொடுமைக்கார அரசு இதுதான். அதேபோல் அதிமுக அணிக்கும் தமிழக மக்களின் மனதில் இடம் இல்லை.
எந்த அச்சுறுத்தலுக்கும் பயப்படாமல், எவ்வித அன்பளிப்புக்கும் விலைபோகாமல் கண்டிப்பாக இண்டியா கூட்டணியைச் சேர்ந்தவர்கள் வெற்றி பெற பாடுபட வேண்டும். சிதம்பரம் தொகுதியில் திருமா வளவனுக்கு பானை சின்னத்தில் வாக்களிக்க வேண்டும் என்றார். கட்சியின் மாவட்ட செயலாளர் மாதவன், மாநிலக் குழு உறுப்பினர் ரமேஷ் பாபு மற்றும் திமுக, விசிக உள்ளிட்ட கூட்டணி கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டு பேசினர்.நகர்மன்ற துணைத் தலைவர் முத்துக்குமரன் நன்றி கூறினார்.