கள்ளக்குறிச்சி: விஜயகாந்தின் ஆன்மா ரிஷிவந்தியத்தில் தான் உள்ளது. அவரது ஆசிபெற்ற குமர குருவை வெற்றி பெறச்செய்யுங்கள் என கள்ளக்குறிச்சியில் தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா பேசினார்.
கள்ளக்குறிச்சி மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் குமர குருவுக்கு ஆதரவாக நேற்று கள்ளக்குறிச்சி மாவட்டம் ரிஷி வந்தியம் அடுத்த பகண்டை கூட்டுச் சாலையில் தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது அவர் பேசுகையில், “ரிஷி வந்தியம் சிறப்பான தொகுதி. அதிமுக கூட்டணியில் விஜயகாந்த் போட்டியிட்டு வெற்றி பெற்ற தொகுதி. எனவே அவரின் ஆன்மா ரிஷி வந்தியத்தில் தான் உள்ளது.
அன்று சென்னையில் விஜயகாந்த் கட்டிய திருமண மண்டபத்தை இடித்தவர்கள் தான் தற்போது ரிஷி வந்தியம் தொகுதியில், விஜயகாந்த் சட்டப் பேரவைத் தொகுதி மேம்பாட்டு நிதியில் கட்டப்பட்ட நிழற்குடையையும் இடித்துள்ளனர். அவர்களுக்கு சரியான பாடம் புகட்ட வேண்டிய தருணம் இது. எனவே நமது கூட்டணியில் அதிமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் குமர குருவை அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறச் செய்து நமது பலத்தை நிரூபிக்க வேண்டும்” என்றார்.