மதுரை: தேர்தல் முடியும் வரையாவது வேட்பாளர் சரவணன் அதிமுகவில் இருக்க வேண்டும் என பாஜக மகளிரணி தலைவர் வானதி சீனிவாசன் பேசினார்.
மதுரை தொகுதியில் போட்டி யிடும் பாஜக வேட்பாளர் ராம.சீனிவாசனை ஆதரித்து கோவை எம்எல்ஏவும், பாஜக தேசிய மகளிரணி தலைவியுமான வானதி சீனிவாசன் மதுரை விளக்குத் தூண்,காமராசர் சாலை உள்ளிட்ட பகுதியில் வாக்கு சேகரித்தார்.
அப்போது அவர் பேசியதாவது: கடந்த 10 ஆண்டுகால வரலாற்றுச் சாதனையாக மோடி ஆட்சி செய்துள்ளார். கிராமப்புறத்தில் வங்கிக் கணக்கு தொடங்குதல், கடைக்கோடி கிராமங்களுக்கும் சமையல் காஸ், எந்தவித உத்தரவாதம் இன்றி சுய உதவிக் குழுக்களுக்கு கடனுதவி, முத்ரா திட்டம் போன்ற எண்ணற்ற திட்டங்களைச் செய்துள்ளோம். திமுக கூட்டணியில் ஒவ்வொருவராக வந்து மோடியிடம் சேருகின்றனர்.
குற்றம் கண்டுபிடிக்கும் தருமி மாதிரி இருக்கும் சு.வெங்கடேசன் மீண்டும் எம்பியாக வேண்டுமா? அவர் மீண்டும் எம்பியாக வந்தால் மனு போடுவார். இதைத் தானே அவர் செய்வார். இன்னொருபுறம் மருத்துவர் சரவணன் தேர்தல் முடியும் வரை அதிமுகவில் இருக்கட்டும் என, அன்னை மீனாட்சியிடம் வேண்டிக் கொள்வோம். இவ்வாறு அவர் பேசினார்.