தமிழகம்

அண்ணாமலை மீது பொய் புகார்: போலீஸார் நடவடிக்கை எடுக்க கோவை ஆட்சியர் உத்தரவு

செய்திப்பிரிவு

கோவை: பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை மீது பொய் புகார் அளித்தநபர் மீது நடவடிக்கை எடுக்குமாறு போலீஸாருக்கு, கோவைமாவட்ட ஆட்சியர் கிராந்தி குமார் பாடி உத்தரவிட்டுள்ளார்.

கோவை மக்களவைத் தொகுதியில் பாஜக வேட்பாளராக அண்ணாமலை போட்டியிடுகிறார். அவர் பிரச்சாரத்தின்போது ஆரத்தி எடுக்கும் பெண்ணுக்கு பணம் கொடுப்பது போன்ற வீடியோவை ஹரீஷ் என்பவர், எக்ஸ் தளம் மூலம் மாவட்ட தேர்தல் அலுவலரும், ஆட்சியருமான கிராந்திகுமார் பாடிக்கு அனுப்பிவைத்து, புகார் அளித்தார்.

இதையடுத்து, அந்த வீடியோவின் உண்மைத்தன்மை குறித்துவிசாரிக்குமாறு போலீஸாருக்கு ஆட்சியர் உத்தரவிட்டார். இந்நிலையில், அண்ணாமலை தனதுஎக்ஸ் தளத்தில், ‘ஒரு காணொலியின் நம்பகத்தன்மையைச் சரிபார்க்கும் ஆதாரங்கள் இருந்தும், அதற்குப் பதிலாக கோவை மாவட்ட ஆட்சியர், ராமநாதபுரம் மாவட்டத்தில் 2023 ஜூலை 29-ம்தேதி 'என் மண்; என் மக்கள்' யாத்திரையின் போது எடுக்கப்பட்ட ஒரு வீடியோ தொடர்பாக தற்போதுநடவடிக்கை எடுக்க முயற்சிக்கிறார்’ என்று தெரிவித்திருந்தார்.

கோவை மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார் பாடி தனது எக்ஸ்தளத்தில், போலீஸ் விசாரணையில், அண்ணாமலை பணம் கொடுப்பது போன்ற வீடியோ 2023-ம் ஆண்டில் வெளியானது என்றும், இது தேர்தல் வரம்புக்குள் வராது என்றும் தெரியவந்துள்ளது. இதனிடையே, தவறான வீடியோ பதிவிட்ட நபர் மீது நடவடிக்கை எடுக்குமாறு உத்தரவிட்டு, காவல் துறை விசாரணைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது’ எனத் தெரிவித்துள்ளார்.

SCROLL FOR NEXT