வேலூர்: வேலூர் மாவட்டம் குடியாத்தம் அருகே ஏரியில் குளிக்கச் சென்ற 4 பெண்கள் தண்ணீரில் மூழ்கி உயிரிழந்தனர். குடியாத்தம் தங்கம் நகரைச் சேர்ந்த சரோஜம்மாள் (60) குடும்பத்தினர் குல தெய்வ வழிபாட்டுக்காக அருகேயுள்ள வேப்பூர் கிராம ஏரிக்கரையோரம் அமைந்துள்ள முனீஸ்வரன் கோயிலுக்கு நேற்று காலை சென்றுள்ளனர்.
அங்கு குடும்பத்தினருடன் வழிபாடு செய்த பின்னர், அருகில் உள்ள ஏரியில் குளிப்பதற்காக சரோஜம்மாள், லலிதா (30), காவ்யா (18), ப்ரீத்தி (17) ஆகியோர் நேற்று பிற்பகல் 3 மணியளவில் சென்றுள்ளனர். நான்கு பேரும் குளித்துக் கொண்டிருந்தபோது, திடீரென சரோஜம்மாள் நீரில் மூழ்கியுள்ளார். அவரைக் காப்பாற்ற முயன்ற லலிதா உள்ளிட்ட மூன்று பேரும் அடுத்தடுத்து தண்ணீரில் மூழ்கினர்.
அவர்களின் அலறல் சப்தம் கேட்டு வந்த குடும்பத்தினர் மற்றும் வேப்பூர் கிராம மக்கள் சிலர் தண்ணீரில் மூழ்கிய 4 பேரையும் காப்பாற்ற முயன்றனர். ஆனால் தேடுதல் பணி நீண்ட நேரமாக நீடித்ததால், 4 பேரும் உயிரிழந்தனர். தொடர்ந்து நால்வரின் சடலங்கள் மீட்கப்பட்டன.
தகவலறிந்து வந்த குடியாத்தம் தாலுகா போலீஸார் நால்வரின் உடல்களையும் மீட்டு, பிரேதப் பரிசோதனைக்காக குடியாத்தம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். இது தொடர்பாக போலீஸார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.