கோவை கவுண்டம்பாளை யம் அருகே நே று மாட் வண்டியில் செ ன்று திமுக வேட்பாள ருக்கு ஆதரவாக வாக் கு சேகரித்த அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா. 
தமிழகம்

கோவை திமுக வேட்பாளருக்கு ஆதரவாக மாட்டு வண்டியில் சென்று அமைச்சர் பிரச்சாரம்

செய்திப்பிரிவு

கோவை: கோவை மக்களவை தொகுதியில் இண்டியா கூட்டணியின் திமுக சார்பில் வேட்பாளராக கணபதி ப.ராஜ்குமார் போட்டியிடுகிறார். அவரை ஆதரித்து, கோவை மக்களவை தொகுதி பொறுப்பாளரும், தமிழக தொழில்துறை அமைச்சருமான டி.ஆர்.பி ராஜா, கோவையில் பல்வேறு இடங்களில் பிரச்சாரம் செய்து வருகிறார்.

அதன்படி, கவுண்டம்பாளையத்தில் நேற்று பிரச்சாரம் செய்ய வந்த அமைச்சர் டி.ஆர்.பி ராஜா, அங்கிருந்த கட்சி நிர்வாகி சரத் விக்னேஷ் என்பவரது வீட்டுக்கு சென்றார். அப்போது, அவருக்கு மேளதாளத்துடன், குதிரைகள் நடனமாட சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. இதையடுத்து, மாட்டு வண்டியில் அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா சென்று பிரச்சாரம் மேற்கொண்டார்.

திமுக வடக்கு மாவட்ட செயலாளர் தொ.அ.ரவி உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

சூலூர் ஒன்றிய பகுதிகளான குளத்தூர், வெங்கிடாபுரம், சின்னியம்பாளையம், கரையாம்பாளையம், நீலாம்பூர், முதலிபாளையம், அரசூர் உள்ளிட்ட பகுதிகளில் நேற்று காலை வேட்பாளர் கணபதி ப.ராஜ்குமார் தீவிர பிரச்சாரம் செய்தார்.

வெங்கிடாபுரம் பகுதியில் அவர் பேசும்போது, ‘‘திமுக ஆட்சியில் மகளிருக்கு உரிமைத் தொகை, பேருந்தில் இலவச பயணம் உள்ளிட்ட பல திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. திமுக அரசு என்றுமே பெண்களுக்கு ஆதரவாக உள்ளது. ஆனால், மணிப்பூரில் பெண்கள் நடமாட முடியாத சூழல் உள்ளது. இதையெல்லாம் பாஜக அரசு சிந்தித்துகூட பார்க்கவில்லை.

பெட்ரோல் விலை குறைக்கப்படும் என்பது உள்ளிட்ட பல்வேறு வாக்குறுதிகளை பாஜக அளித்தது. ஆனால், அவர்கள் சொன்னதில் ஒன்றைகூட நிறைவேற்றவில்லை.

கோவை விமான நிலையம் விரிவாக்கத்துக்காக பல ஆண்டுகளாக போராடி வருகிறோம். விரிவாக்கம் செய்தால் நிறைய தொழிற்சாலைகள் வரும், அனைவருக்கும் வேலைவாய்ப்பு கிடைக்கும். சர்வதேச விமான நிலையமாக கோவையை செய்யாமல் தவிர்த்து வருகின்றனர். பிரதமர் வேட்பாளர் யார் என்று தெரியாமலேயே அதிமுகவினர் போட்டியிடுகின்றனர். அதிமுக அமைச்சர்கள் கோடிக்கணக்கில் கொள்ளையடித்து, தற்போது பாஜகவுக்கு அஞ்சி செயல்பட்டு கொண்டிருக்கின்றனர். பாஜகவின் பினாமி கட்சிதான் அதிமுக. அந்த கட்சிக்கு அளிக்கும் வாக்கு நோட்டாவுக்கு சமம். இந்த தேர்தலில் 40 தொகுதிகளிலும் இண்டியா கூட்டணிதான் வெல்லும்’’ என்றார்.

SCROLL FOR NEXT