தமிழகம்

பாஜக எந்த வாக்குறுதியையும் நிறைவேற்றவில்லை: தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை

செய்திப்பிரிவு

சென்னை: மக்களுக்கு கொடுத்த எந்த வாக்குறுதியையும் பாஜக நிறைவேற்றவில்லை என்று தமிழக காங்கிரஸ்கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை குற்றம்சாட்டியுள்ளார்.

மத்திய சென்னை மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் தயாநிதி மாறனை ஆதரித்து சென்னை அரும்பாக்கம் எம்எம்டிஏ காலனியில், தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை நேற்று பிரச்சாரம் செய்தார். அப்போது, அவர் பேசியதாவது:

காங்கிரஸ் ஆட்சியில் மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு திட்டம் கொண்டு வரப்பட்டது. இத்திட்டத்தால் கிராமங்கள் செழிப்பாக உள்ளன. நகரங்களில் இப்போது பேருந்துகள் ஓடுகின்றன. இந்தபேருந்துகள் எப்போது, யாரால்கொண்டு வரப்பட்டது. அரசுடமையாக்கியது யார்? இதை எல்லாம் யோசித்து பார்க்க வேண்டும்.

மக்களுக்கு கொடுத்த வாக்குறுதி எதையும் பிரதமர் மோடி நிறைவேற்றவில்லை. பாஜக ஆட்சியில்வரலாறு காணாத வகையில், ரூ.7.50 லட்சம் கோடி ஊழல் நடைபெற்று உள்ளது என்று இந்தியதலைமை கணக்கு தணிக்கையாளர் (சிஏஜி) அறிக்கையில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. தேர்தல் கடன்பத்திரத்தில் பாஜக ஆயிரம் கோடி ரூபாய்க்கு மேல் ஊழல் செய்து உள்ளது.

10 ஆண்டுகளுக்கு முன்பு 2 கோடிபேருக்கு வேலைவாய்ப்பு வழங்கப்படும் என்று பாஜகவினர் வாக்குறுதி கொடுத்தனர். ஆனால், யாருக்கும் வேலை வழங்கவில்லை. இருக்கிற வேலையும் பறிபோகும் நிலை உள்ளது.

காங்கிரஸ் ஆட்சியில் ரூ.420-க்கு விற்ற காஸ் சிலிண்டர் தற்போது ஆயிரம் ரூபாயை தொட்டுவிட்டது. தேர்தலுக்காக இப்போது ரூ.100 குறைக்கப்பட்டுள்ளது. பெட்ரோல், டீசல் விலையை பாதியாகக் குறைப்பதாக பாஜக தெரிவித்தது. ஆனால், நிறைவேற்றவில்லை. இப்படி மக்களுக்கு கொடுத்த எந்த வாக்குறுதிகளையும் பாஜக நிறைவேற்றவில்லை.

இவ்வாறு அவர் பேசினார்.

பிரச்சாரத்தின்போது, அண்ணாநகர் சட்டப்பேரவை உறுப்பினர் மோகன் உட்பட பலர் கலந்துகொண்டனர். தொடர்ந்து, கும்மிடிப்பூண்டி, மதுரவாயலில் செல்வப்பெருந்தகை பிரச்சாரம் மேற்கொண்டார்.

SCROLL FOR NEXT