விருத்தாசலம்: விருத்தாசலம் காங்கிரஸ் மாளிகையில் இண்டியா கூட்டணி கட்சி நிர்வாகிகள் கூட்டம், காங்கிரஸ் வேட்பாளர் விஷ்ணுபிரசாத் அறிமுக கூட்டமும் வாக்கு சேகரிப்பும், தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை அமைச்சர் சி.வெ.கணேசன் தலைமையில் நேற்று நடைபெற்றது. இதில் திமுக, கம்யூனிஸ்ட், மதிமுக, திக, இந்திய யூனியன் முஸ்லிக் லீக் உள்ளிட்ட கட்சிகளின் நிர்வாகிகள் வேட்பாளரை அறிமுகப்படுத்தி வாக்கு சேகரித்தனர்.
இதையடுத்து விருத்தாசலம் எம்எல்ஏ எம்.ஆர்.ஆர்.ராதா கிருஷ்ணன் பேசும்போது, “மத்தியில் அடுத்து காங்கிரஸ் ஆட்சி அமைந்தால் தான் 100 நாள் வேலை நீடிக்கும். மோடி தலை மையிலான அரசு 100 நாள் வேலைக்கு ஒதுக்கும் நிதியை பாதியாக குறைத்துவிட்டது.
அடுத்து ஆட்சிக்கு வந்தால் அந்த வேலையே இருக்காது. எனவே மத்தியில் காங்கிரஸ் ஆட்சிஅமைய விஷ்ணுபிரசாத் வெற்றி பெற்றாக வேண்டும்” என்றார்.
தொடர்ந்து தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் தேர்தல் பணிக்குழு பொறுப்பாளர் திருமால்வளவன் பேசுகையில், ”சகோதரிக்காக, மருமகனுக்கு மைத்துனர் புரியும் சேவையும் பணிவிடையும் அனைவரும் அறிவர். எனவே பாமக தலைவர் அன்புமணி அடுத்து சிறை செல்லாமல் இருக்க வேண்டுமானால், கடலூர்தொகுதியின் காங்கிரஸ் வேட்பாளர் விஷ்ணுபிரசாத் வெற்றிபெற்றாக வேண்டும்.
எனவே திமுக கூட்டணிக் கட்சியினர் மட்டுமின்றி பாமக வினரும் விஷ்ணுபிரசாத்தை வெற்றிபெறச் செய்ய வேண்டும்” என்றார். அப்போது கூட்டத்தில் பலத்த கரகோஷம் எழுந்தது.