சிவகங்கை: சிவகங்கை தொகுதி கல்வி, பொருளாதாரத்தில் பின்தங்க முக்கியக் காரணம் ப.சிதம்பரம் குடும்பம்தான், என அதிமுக முன்னாள் அமைச்சர் மகளும், சுயேச்சை வேட்பாளருமான தனலெட்சுமி குற்றம்சாட்டினார்.
சிவகங்கை தொகுதியில் அதிமுக சார்பில், சேவியர்தாஸ் போட்டியிடுகிறார். இந்நிலையில், புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி அருகே வடகாட்டைச் சேர்ந்த அதிமுக முன்னாள் அமைச்சர் வெங்கடாசலம் மகள் தனலெட்சுமி சுயேச்சையாகப் போட்டியிடுகிறார். இவருக்கு விசில் சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது.
சிவகங்கையில் தனலெட்சுமி செய்தியாளர்களிடம் கூறியதாவது: தமிழ் முத்தரையர் வாழ்வுரிமைச் சங்கம் சார்பில் போட்டியிடுகிறேன். ஆலங்குடி பகுதியில் கார்த்தி சிதம்பரம் எதுவும் செய்யவில்லை. 35 ஆண்டுகளுக்கு மேலாக ப.சிதம்பரமும், அவரது மகன் கார்த்தி சிதம்பரமும் சிவகங்கை தொகுதி எம்.பி.யாக இருந்துள்ளனர்.
ஆனால், சிவகங்கை தொகுதி இன்னும் கல்வி, பொருளாதாரத்தில் மிகவும் பின்தங்கியே உள்ளது. இதனால் அடித்தட்டு மக்களின் கல்வி, பொருளாதார மேம்பாட்டுக்காகப் போட்டியிடுகிறேன். எனது தந்தை வெங்கடாசலம் வழியில் நானும் பயணம் செய்கிறேன். என்னை எப்போது வேண்டுமானாலும் தொடர்பு கொண்டு குறைகளைத் தெரிவிக்கலாம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.