திருச்சி: தேர்தல் நெருங்கும் நேரத்தில் எதிர்க்கட்சிகள் மீது பல்வேறு துறைகள் மூலமாக பாஜக மேலும் நெருக்கடி கொடுக்கும் என திருச்சி தொகுதி மதிமுக வேட்பாளர் துரை வைகோ தெரிவித்தார்.
திருச்சியில் நேற்று அவர் செய்தியாளர்களிடம் கூறியது: திருச்சி தொகுதியில் மதிமுக வேட்பாளராக போட்டியிடும் எனக்கு தீப்பெட்டி சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது. எதிர்பார்த்த சின்னம் கிடைத்துள்ளது எங்களுக்கு மிக்க மகிழ்ச்சி. கூட்டணி கட்சியினரின் ஒத்துழைப்புடன் அடுத்த 24 மணி நேரத்தில் மக்கள் மத்தியில் கொண்டு சேர்ப்போம். காங்கிரஸ் கட்சியின் வங்கிக்கணக்கு முடக்கம், கேஜ்ரிவால் கைது போன்றவை எதிர்க் கட்சிகளை முடக்கும் பாஜகவினரின் சதி வேலை.
தேர்தல் நெருங்கும் நேரத்தில் இந்த நெருக்கடி எதிர்க்கட்சிகள் மீது மேலும் அதிகரிக்கும்.இதற்கு தேர்தலில் மக்கள் தகுந்த பதிலடி தருவார்கள். தேர்தலில் போட்டியிட பணமில்லை எனமத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறுவது ஏற்புடையதல்ல. தற்போது பாஜக சார்பில் போட்டியிடும் தமிழிசை சவுந்தர ராஜன், எல்.முருகன், நயினார் நாகேந்திரன் போன்றோரிடம் பணம் உள்ளதா? என்பதை பாஜக-தான் விளக்க வேண்டும். முரண்பாடுகளின் மொத்த உருவமாக அண்ணாமலை செயல்பட்டு வருகிறார். பாஜகவின் வீழ்ச்சிக்கு அவரது செயல்பாடுகளும் காரணம். இவ்வாறு அவர் கூறினார்.