கோவில்பட்டி அருகே வானரமுட்டியில் திமுக வேட்பாளர் கனிமொழி பிரச்சாரம் மேற்கொண்டார். 
தமிழகம்

“100 நாள் வேலை திட்ட சம்பளம் ரூ.400 ஆக உயர்த்தப்படும்” - கனிமொழி உறுதி

செய்திப்பிரிவு

கோவில்பட்டி: தூத்துக்குடி மக்களவைத் தொகுதி திமுக வேட்பாளர் கனிமொழி நேற்றுமாலை கோவில்பட்டி சட்டப்பேரவை தொகுதிக்கு உட்பட்ட நாலாட்டின்புதூரில் வாக்கு சேகரித்தார்.

அப்போது அவர் பேசும்போது, “இந்த தேர்தல் மத்தியில் உள்ளபாஜகவின் ஆட்சியை அகற்றக்கூடிய தேர்தல். பிரதமர் மோடி ஆட்சிக்கு வந்தபோது காஸ் சிலிண்டர் விலை ரூ.410. தற்போது ரூ.1,000-த்துக்கு மேல் உள்ளது. நூறு நாள் வேலை திட்டத்தில் 30 அல்லது 35 நாட்கள் மட்டுமே பணி வழங்கப் படுகிறது. சம்பளமும் சரியாக தருவதில்லை. மத்தியில் இண்டியா கூட்டணி ஆட்சி அமைந்தால் 100 நாள் வேலைக்கு சம்பளம் ரூ.400 ஆக உயர்த்தி வழங்கப்படும்.

ஆனால், பாஜக இந்த திட்டத்தையே நிறுத்த முயற்சிக்கிறது. இண்டியா கூட்டணி ஆட்சி அமைந்தவுடன் மகளிர் உரிமைத் தொகை கிடைக்கப் பெறாத பெண்களுக்கு உரிமைத் தொகை வழங்கப்படும். சுங்கச் சாவடிகள் மூடப்படும். விவசாய கடன், கல்விக் கடன் ரத்து செய்யப்படும்” என்றார் அவர். தொடர்ந்து வானரமுட்டி, கழுகு மலை, செட்டி குறிச்சி, கயத்தாறு, அகிலாண்டபுரம், கடம்பூர், காமநாயக்கன்பட்டி பகுதிகளில் வாக்கு சேகரித்தார்.

SCROLL FOR NEXT