தமிழகம்

“தமிழகம் போதையில் தள்ளாடுகிறது” - பிரேமலதா விஜயகாந்த் பிரச்சாரம் @ ஓசூர்

கி.ஜெயகாந்தன்

ஓசூர்: “இன்றைக்கு தமிழகம் முழுவதும் டாஸ்மாக், கஞ்சா விற்பனை அதிகரித்துள்ளதால் தமிழகமே போதையில் தள்ளாடுகிறது. அதேபோல் பாலியல் வன்கொடுமை தமிழகம் முழுவதும் தலைவிரித்தாடுகிறது. மேலும், தமிழகத்தில் படித்த இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு இல்லை” என பிரேமலதா விஜயகாந்த் குற்றம் சாட்டியுள்ளார்.

ஓசூர் ராமநகரில் அதிமுக வேட்பாளர் ஜெயபிரகாஷை ஆதரித்து தேமுதிக பொது செயலாளர் பிரேமலதா பேசுகையில், “எம்ஜிஆர், ஜெயலலிதா, விஜயகாந்த் என்ற ஒரு ராசியான கூட்டணி மக்களுக்காக உருவாக்கப்பட்ட வெற்றி கூட்டணி.

விஜயகாந்த் மறைவுக்கு பின் நான் எங்கும் வராமல் இருந்தேன். என்னிடம் எடப்பாடி பழனிசாமி நிச்சயமாக 40 தொகுதிகளிலும் வந்த பிரச்சாரம் செய்ய வேண்டும் என கேட்டுக்கொண்டார். அவர் வார்த்தையை மதித்து இன்றைக்கு விஜயகாந்த் மறைவுக்குப்பின் வாக்கு சேகரிக்க வந்துள்ளேன்.

இன்றைக்கு தமிழகம் முழுவதும் டாஸ்மாக்,கஞ்சா விற்பனை அதிகரித்துள்ளதால் தமிழகமே போதையில் தள்ளாடுகிறது. அதேபோல் பாலியல் வன்கொடுமை தமிழகம் முழுவதும் தலைவிரித்தாடுகிறது. மேலும், தமிழகத்தில் படித்த இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு இல்லை.

பேருந்து கட்டணம் மற்றும் மின் கட்டணம் உயர்வு, சொத்து வரி உயர்வு, படித்த இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு இல்லை. இதையெல்லம் சரிசெய்ய வேண்டிய தமிழக அரசு டாஸ்மாக் விற்பனை செய்து இளைஞர்களை போதைக்கு அடிமையாக்கி உள்ளது.

அதேபோல் தேர்தல் நேரங்களில் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றாத முதல்வர் எப்படி மக்களுக்கு தகுதியான முதல்வராக இருப்பார். மத்திய அரசு ஜிஎஸ்டி வரியை விதித்துள்ளதால், சிறு,குறு தொழிற்சாலைகள் மற்றும் வியாபாரிகள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

சமையல் எரிவாயு, பெட்ரோல், டீசல் உள்ளிட்ட அனைத்து அத்தியவாசிய பொருட்களின் விலை உயர்ந்துள்ளதால் பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்” என்றார் பிரேமலதா விஜயகாந்த்.

SCROLL FOR NEXT