தமிழகம்

நூறு நாள் வேலை திட்டத்தில் தின ஊதியத்தை ரூ.600 ஆக அரசு உயர்த்த வேண்டும்: விவசாய தொழிலாளர்கள் சங்கம் கோரிக்கை

செய்திப்பிரிவு

சென்னை: நாடு முழுவதும் 100 நாள் வேலை திட்ட தின ஊதியத்தை ரூ.600-ஆகவும், வேலை நாட்களை 200 ஆகவும் உயர்த்த வேண்டும் என அகில இந்திய விவசாயத் தொழிலாளர்கள் சங்கம் கோரியுள்ளது.

இதுதொடர்பாக மாநிலத் தலைவர் எம்.சின்னதுரை எம்எல்ஏ, பொதுச்செயலாளர் வீ.அமிர்தலிங்கம் ஆகியோர் நேற்று விடுத்த அறிக்கையில் கூறியிருப்பதாவது:

கிராமப்புற வேலையின்மையும், பாஜக அரசின் கொள்கைகளாலும் பல்லாயிரக்கணக்கான சிறு, குறு தொழில்கள் மூடப்பட்டுள்ளதாலும் கிராமப்புறங்களில் விவசாயம், அதுசார்ந்த தொழில்களில் ஈடுபட்டிருந்த 2 கோடிக்கும் மேற்பட்ட விவசாயக் கூலித் தொழிலாளர்கள் சிறு, குறுவிவசாயிகள் தமிழகத்தில் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

வேலையும் வருமானமும் இழந்துள்ள விவசாயக் கூலி தொழிலாளர்களுக்கு பாஜக அரசு, தாறுமாறாக விதித்துள்ள ஜிஎஸ்டி வரியால் அனைத்து அத்தியாவசிய பண்டங்களும் மிகக் கடுமையாக விலை உயர்ந்துள்ளது. இது கிராமப்புற ஏழைகளை பாதிக்கிறது. பாஜக அரசின் 10 ஆண்டு கால செயல்பாடுகளால் வாழ்விழந்த மக்கள் கந்துவட்டி கும்பலிடம் சிக்கியுள்ளனர்.

எனவே வேலையின்மை, விலைவாசி உயர்வு ஆகிய காரணங்களால் பாதிக்கப்பட்டுள்ள கிராமப்புற ஏழைகளுக்கு 100 நாள் வேலைக்கான தின ஊதியத்தை ரூ.600 ஆக உயர்த்துவதுடன் வேலை நாட்களை 200 ஆக அதிகரிக்க வேண்டும். உயர்த்தாவிட்டால் கிராமம்தோறும் பாஜக அரசை அம்பலப்படுத்தி பிரச்சாரத்தில் ஈடுபடுவோம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT