விருதுநகர்: விருதுநகரில் உரிய அனுமதியின்றி ஜீப்பில் கொண்டு செல்லப்பட்ட 5 கிலோ 300 கிராம் தங்க நகைகள் இன்று பறிமுதல் செய்யப்பட்டன.
விருதுநகர் அருகே உள்ள சத்திரரெட்டியபட்டி சோதனை சாவடியில் தேர்தல் பறக்கும்படை அலுவலர் இந்துமதி தலைமையிலான அதிகாரிகள் இன்று பிற்பகல் வாகன சோதனை நடத்தினர். அப்போது, மதுரையிலிருந்து நாகர்கோவில் நோக்கிச் சென்ற தனியார் கூரியர் நிறுவனத்தின் ஜீப்பை நிறுத்தி சோதனையிட்டனர்.
அப்போது, உரிய ஆவணங்களின்றி கன்னியாகுமரியில் உள்ள பல்வேறு நகைக்கடைகளுக்கு சுமார் 5 கிலோ 300 கிராம் தங்க நகைகள் கொண்டுசெல்லப்பட்டது தெரியவந்தது. மேலும், மதுரையைச் சேர்ந்த ஓட்டுநர் நாகராஜ், டெலிவரி அசிஸ்டண்ட் நரேஷ்பாலாஜி, ஆகியோருடன் ஊட்டியைச் சேர்ந்த ஓய்வு பெற்ற ராணுவ அதிகாரி கமலநாதன் என்பவரின் பாதுகாப்புடன் நகைகளைக் கொண்டு சென்றது தெரியவந்தது.
அதையடுத்து, உரிய ஆவணங்களின்றி கொண்டு செல்லப்பட்ட 5 கிலோ 300 கிராம் தங்க நகைகளையும் தேர்தல் பறக்கும்படை அதிகாரிகள் பறிமுதல் செய்து, விருதுநக்ர வட்டாட்சியர் அலுவலகத்தில் உதவித் தேர்தல் நடத்தும் அலுவலர் கார்த்திகேயினியிடம் ஒப்படைத்தனர். பின்னர், 5 கிலோ 300 கிராம் நகைகளும் மாவட்ட கருவூலத்தில் ஒப்படைக்கப்பட்டன.