உதகை: பாஜக ஒரு பொருட்டே இல்லை என்று முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி தெரிவித்ததற்கு, பாஜகவின் அசுர வளர்ச்சி ஜூன் 4-ம் தேதி தெரியும் என மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் பதில் அளித்துள்ளார்.
உதகையில் பாஜக செயல் வீரர்கள் கூட்டம் நேற்று நடைபெற்றது. இதில், மத்திய இணை அமைச்சரும், நீலகிரி மக்களவை தொகுதி வேட்பாளருமான எல்.முருகன் பங்கேற்றார். அப்போது, பாஜக ஒரு பொருட்டே அல்ல என்று முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி கூறியுள்ளாரே என கேட்டதற்கு, “தமிழகத்தில் யார் பெரிய கட்சி என்பது ஜூன் 4-ம் தேதி தெரியவரும். நாங்களும் அதிமுகவை ஒரு போட்டியாகவே கருதவில்லை.
பாஜகவின் அசுர வளர்ச்சி ஜூன் 4-ம் தேதி தெரிய வரும். அன்று எந்த கட்சி காணாமல் போகிறது என்பதும் தெரியவரும். நீலகிரி மாவட்டத்தில் அதிமுக எங்கிருக்கிறது என்பதே தெரியவில்லை.
அதேபோல, தமிழ்நாடு முழுவதும் அதிமுக களத்தில் இல்லை. பாஜக வெற்றி பெற்று, 3-வது முறையாக நரேந்திர மோடி பிரதமராக பதவியேற்பார்” என்றார்.
பாஜக சமூக நீதிக்கு எதிரானது என முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளாரே? என்ற கேள்விக்கு, “போலி சமூக நீதி பேசுபவர் தான் முதல்வர் ஸ்டாலின். பாஜக சார்பில் பட்டியல் இனத்தவர், பழங்குடியினர் துணை முதல்வர் களாகவும், முதல்வராகவும் உள்ளனர். சமூக நீதியை பிரதமர் மோடி நிலை நாட்டி வருகிறார். திமுகவில் அமைச்சர்களாக உள்ள பட்டியலினத்தைச் சேர்ந்த மூன்று பேர், கடைசி இடங்களில் உள்ளனர்” என்றார் எல்.முருகன்.