ராமநாதபுரம் தொகுதியில் பாஜக கூட்டணியில் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் சுயேச்சையாகவும், அதிமுக வேட்பாளர் ஜெயபெருமாள், திமுக கூட்டணியில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் வேட்பாளர் நவாஸ் கனி, நாம் தமிழர் கட்சி வேட்பாளர் சந்திரபிரபா ஆகியோர் வேட்புமனு தாக்கல் செய்திருந்தனர்.
இதுதவிர சுயேச்சையாக ஓ.பன்னீர்செல்வம் பெயருடைய 4 பேர், எம்.பன்னீர் செல்வம் என்ற பெயரில் ஒருவர் உட்பட மொத்தம் 56 பேர் வேட்புமனுக்களை தாக்கல் செய்திருந்தனர். நேற்று நடைபெற்ற வேட்புமனு பரிசீலனையில் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், அதிமுக வேட்பாளர், ஜெயபெருமாள், முஸ்லிம் லீக் வேட்பாளர் நவாஸ் கனி, நாம் தமிழர் வேட்பாளர் சந்திரபிரபா ஆகியோரின் மனுக்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டன.
அதேபோல் சுயேச்சையாக தாக்கல் செய்யப்பட்ட ஓ.பன்னீர்செல்வம் பெயருடைய 4 பேர் மற்றும் எம்.பன்னீர் செல்வம் பெயருடைய ஒருவர் உள்ளிட்ட 5 பன்னீர் செல்வங்களின் மனுக்களும் ஏற்றுக் கொள்ளப்பட்டன.
சின்னம் ஒதுக்கீடு செய்வதில் மற்ற 5 பேரும் ஓபிஎஸ்-க்கு போட்டியாக இருப்பார்கள் என்றும், வாக்குப் பதிவின்போது குழப்பத்தை ஏற்படுத்தவும் இவர்கள் காரணமாக இருப்பார்கள் என்றும் ஓபிஎஸ் ஆதரவாளர்கள் கூறுகின்றனர்.
இந்நிலையில், பன்னீர் செல்வம் பெயரில் மனு தாக்கல் செய்திருந்த 5 பேரும் நேற்று வேட்புமனுப் பரிசீலனைக்கு வரவில்லை. அவர்களில் 3 பேரை அதிமுகவினரும், 2 பேரை திமுகவினரும் தங்களது கட்டுப்பாட்டில் வைத்திருப்பதாகவும் கூறப்படுகிறது.
இவர்கள் வெளியே வந்தால் வேட்பு மனுக்களைத் திரும்பப் பெற வைக்க அழுத்தம் கொடுப்பார்கள் அல்லது அவர்களது உயிருக்கு ஆபத்து ஏற்படலாம் என்றும் அதற்காக இவர்கள் 5 பேரும் சிலரது கட்டுப்பாட்டில் இருப்பதாகக் கூறப்படுகிறது.