சென்னை: நாடாளுமன்றத் தேர்தலை நாடுமுழுவதும் அமைதியாக நடத்த தேர்தல் ஆணையம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதன் ஒருபகுதியாக பொதுமக்கள் அச்சமின்றி வாக்களிக்கும் வகையில் துணை ராணுவப்படையினர் தமிழகம் வரவழைக்கப் பட்டுள்ளனர். அவர்கள் அனைத்து மாவட்டங்களுக்கும் பிரித்து அனுப்பப்பட்டு, அங்கு அணிவகுப்பு நடத்தி வருகின்றனர்.
மேலும், இந்த விவகாரத்தில் உரிய நடவடிக்கை எடுக்குமாறு தமிழக காவல் துறையின் சட்டம் - ஒழுங்கு டிஜிபி சங்கர் ஜிவாலுக்கு அறிவுறுத்தப்பட்டது.
இதையடுத்து, தமிழகம் முழுவதும் உள்ள ரவுடிகளின் பட்டியலைசேகரிக்க அனைத்து காவல் ஆணையர்கள், மாவட்ட காவல் கண்காணிப்பாளர்களுக்கு அவர் உத்தரவிட் டார். அதன்படி, சுமார் 21 ஆயிரம்ரவுடிகள் பட்டியலிடப்பட்டுள்ளதா கக் கூறப்படுகிறது. அவர்களில் செயல்பாட்டில் உள்ளவர்கள், திருந்தி வாழ்பவர்கள், சிறையில் உள்ளவர்கள், ஜாமீனில் வெளியேநடமாடுபவர்கள், தலைமறைவாக உள்ளவர்கள் என தனித்தனியாக பட்டியலிடப்பட்டுள்ளது.
மேலும், குற்ற பின்னணி கொண்ட ரவுடிகளின் வீடுகளுக்குநேரடியாகச் சென்று குற்றச்செயல்களில் ஈடுபடக் கூடாது. மீறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என போலீஸார் எச்சரித்து வரு கின்றனர். குற்ற பின்னணி கொண்ட சுமார் 3 ஆயிரம் பேரிடம் தவறு செய்ய மாட்டோம் என எழுதியும் வாங்கப்பட்டுள்ளது.
சென்னையைப் பொறுத்தவரை காவல் ஆணையர் சந்தீப் ராய் ரத்தோரின் நேரடி மேற்பார்வையில் கூடுதல் காவல் ஆணையர்கள் பிரேம் ஆனந்த் சின்ஹா, அஸ்ரா கார்க் ஆகியோர், ரவுடிகளை உன்னிப்பாகக் கண்காணித்து நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர்.
இதுகுறித்து போலீஸ் அதிகாரிகளிடம் கேட்டபோது, ‘‘அமைதியான முறையில் நாடாளுமன்றத் தேர்தலை நடத்த அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளன. குற்றச்செயல்களில் ஈடுபடுபவர் கள் மீது பாரபட்சம் இன்றி கடும்நடவடிக்கை எடுக்கப்படும். தேவைப்பட்டால் குண்டர் சட்டமும் பாயும்’’ என்றனர்.