தமிழகம்

பாரதியார் பல்கலைக்கழக லஞ்ச புகாரில் பலருக்கு தொடர்பு: பணி நியமனங்களில் ரூ.30 கோடி லஞ்சம் வசூல்?- விரிவடைகிறது விசாரணை

ர.கிருபாகரன்

கோவை பாரதியார் பல்கலைக்கழக பணி நியமன ஊழல் புகார் பூதாகரமாக வெடிக்கிறது. சமீபத்தில் நிரப்பப்பட்ட பணியிடங்கள் அனைத்துக்கும் லட்சக்கணக்கில் பணம் வசூலிக்கப்பட்டதாகவும், அரசின் உத்தரவின்பேரில் விசாரணை விரிவடையும் எனவும் லஞ்ச ஒழிப்பு போலீஸார் கூறுகின்றனர்.

கோவையில் உள்ள பாரதியார் பல்கலைக்கழகத்தில் தகுதி காண் காலத்தை பூர்த்தி செய்ய ரூ.30 லட்சம் லஞ்சம் கேட்டதாக உதவி பேராசிரியர் சுரேஷ் என்பவர் கொடுத்த புகாரின்பேரில் துணைவேந்தர் ஆ.கணபதி, அவருக்கு உடந்தையாக இருந்ததாக வேதியியல் துறை பேராசிரியர் தர்மராஜ் ஆகியோர் நேற்று முன்தினம் (3-ம் தேதி) கைது செய்யப்பட்டனர். ரூ.29 லட்சத்தை 4 முன்தேதியிட்ட காசோலைகளாகவும், ரூ.1 லட்சத்தை ரூபாய் நோட்டுகளாகவும் (ரசாயனம் தடவப்பட்டவை) பெற்றபோது லஞ்ச ஒழிப்பு போலீஸாரால் கையும், களவுமாக கைது செய்யப்பட்டனர். இரவு 11.15 மணியளவில் விசாரணை முடிந்தது.

இதைத் தொடர்ந்து, கோவை அரசு மருத்துவமனையில் மருத்துவப் பரிசோதனை முடிந்ததும் இருவரும் கோவை ரேஸ்கோர்ஸில் உள்ள லஞ்ச ஒழிப்பு சிறப்பு நீதிமன்ற நீதிபதி முன் ஆஜர்படுத்தப்பட்டனர்.

வழக்கை விசாரித்த நீதிபதி இருவரையும் வரும் 16-ம் தேதி வரை நீதிமன்றக் காவலில் வைக்க உத்தரவிட்டார். நேற்று அதிகாலை 1 மணியளவில் இருவரும் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர். துணைவேந்தர் கணபதி தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட ஜாமீன் மனு நாளை (6-ம் தேதி) விசாரணைக்கு வருகிறது.

இதற்கிடையில் துணைவேந்தர் கணபதிக்கு உடந்தையாக இருந்ததாக பல்கலைக்கழக தொலைதூரக் கல்வி மைய இயக்குநர் (பொறுப்பு) மதிவாணனும் வழக்கில் சேர்க்கப்பட்டுள்ளார்.

‘லஞ்ச ஒழிப்பு 7-வது பிரிவின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. மதிவாணன் விசாரணைக்கு ஒத்துழைக்காத பட்சத்தில் கைது நடவடிக்கை எடுக்கப்படும். துணைவேந்தர் வீட்டில் இருந்து மீட்கப்பட்ட 28 கிழிந்த ரூபாய் நோட்டுகள் மற்றும் கணபதியின் கைரேகை பதிவுகளை ஆய்வக சோதனைக்கு அனுப்ப உள்ளோம். துணைவேந்தரின் மனைவி, அவரது அலுவலக உதவியாளர், புகார் தெரிவித்த உதவி பேராசிரியர், ஆட்சி மன்றக்குழு உறுப்பினர்கள் உள்ளிட்டோரிடமும் விரி வான விசாரணை நடத்தப்படும்’ என லஞ்ச ஒழிப்பு போலீஸார் கூறு கின்றனர்.

2016-ம் ஆண்டு கண பதி துணைவேந்தராக பொறுப்பேற்ற பிறகு பல்கலைக்கழகத்தில் பல் வேறு துறைகள் மற்றும் உறுப்புக் கல்லூரிகளில் உள்ள 88 காலிப் பணியிடங்களை (டீச்சிங்) நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டது. ஆனால் நேர்முகத் தேர்வு தேதி அறிவிப்பில் தொடங்கி பதிவாளர் மோகன் பதவிநீக்கம் வரை வெளிப்படையாகவே குளறுபடிகள் காணப்பட்டன. அதன் தொடர்ச்சியாகவே பல்கலைக்கழகத்தில் பல துறைகளுக்கும் 68 பேர், உறுப்புக் கல்லூரிகளுக்கு 12 பேர் என 80 பேர் பேராசிரியர்கள், உதவி, இணை பேராசிரியர்களாக நியமிக்கப்பட்டனர். இந்த நியமனம் முழுவதுமே லஞ்சத்தின் அடிப்படையில் நிரப்பப்பட்டதாகப் புகார்கள் எழுந்தன.

இதைத் தொடர்ந்தே தற்போது லஞ்ச புகார் உறுதி செய்யப்பட்டு துணைவேந்தர் உள்ளிட்டோர் மீது கைது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

‘80 பணியிடங்களுக்கும் சேர்ந்து சுமார் ரூ.30 கோடி அளவில் லஞ்சம் கைமாறியிருக்க வாய்ப்புள்ளது. இதுதவிர ஆசிரியர் பணி இல்லாத மற்ற பணியிடங்களும் நிரப்பப்பட்டுள்ளன. ஆளுகைக்கு உட்படாத பல இடங்களில் விதிமுறைகளை மீறி தொலை தூர கல்வி மையங்கள் தொடங்க அனுமதிக்கப்பட்டுள்ளன. இதில் துணைவேந்தர் மட்டுமல்லாமல் துறைத் தலைவர்கள், மக்கள் தொடர்புத் துறை அலுவலர்கள், சிண்டிகேட் உறுப்பினர்கள், உயர்கல்வித்துறை அதிகாரிகள் உள்ளிட்டோருக்கும் அதில் பங்கு இருக்கலாம்’ என லஞ்ச ஒழிப்பு போலீ ஸார் கூறுகின்றனர்.

இதை உறுதி செய்யும் விதமாக, ‘லஞ்ச புகாருக்கு உள்ளான துணைவேந்தர் மீது நடவடிக்கை எடுக்கப்படும், ஆளுநரிடம் ஆலோசனை கேட்கப்படும்’ என உயர் கல்வித்துறை அமைச் சர் அன்பழகன் நேற்று தெரிவித்துள்ளார்.

ஒவ்வொறு பதவிக்கும் ஒவ்வொரு தொகை நிர்ணயிக்கப்பட்டுள்ளதாகவும் அதில் அதிகபட்சமாக ரூ.66 லட்சம் வரை வசூலிக்கப்பட்டதாகவும் பாதிக்கப்பட்ட நபர்கள் தெரிவிக்கின்றனர்.

துணைவேந்தர் அலுவலகத்துக்கு நெருக்கமாக உள்ள ஊழியர்கள் இதை நேரடியாகவே தங்களிடம் தெரிவித்ததாகவும் விண்ணப்பதாரர்கள் கூறுகின்றனர். ஏஜெண்ட்கள் மூலம் பணியிடங்களுக்கான தொகை பேரம் பேசப்பட்டு, ஆட்கள் தேர்வு நடத்தப்பட்டதாகவும் அதன் பிறகே பெயரளவில் நேர்காணல் நடைபெற்றதாகவும் கூறப்படுகிறது.

இதில் ஈரோட்டில் 2 ஏஜெண்ட்கள் செயல்பட்டதும் தற்போது வழக்கில் சேர்க்கப்பட்டுள்ள நபர்கள் கோவை யில் ஏஜெண்டாக பணியாற்றியவர்கள் என்றும் லஞ்ச ஒழிப்பு போலீஸார் கூறுகின்றனர்.

திருச்சி நவல்பட்டு அண்ணாநகரில் உள்ள கணபதியின் வீட்டில், துணை வட்டாட்சியர் ரமேஷ், வருவாய் ஆய்வாளர் யோகராஜா ஆகியோர் முன்னிலையில் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு போலீஸார் நேற்று முன்தினம் இரவு சோதனையிட்டனர். அப்போது, அங்கிருந்து சில ஆவணங்களை கைப்பற்றி எடுத்துச் சென்றனர்.

இதுகுறித்து போலீஸார் கூறும்போது, ‘அந்த வீட்டின் சொத்து ஆவணங்கள் மட்டுமின்றி மொத்தம் 4 இடங்களிலுள்ள வீடுகளுக்கான சொத்து ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன. இதில் ஒரு வீடு புதிதாக கட்டப்பட்டு வருவதாக தெரிகிறது’ என்றனர்.

தமிழகத்தில் துணைவேந்தர் ஒருவர் பணியில் இருக்கும்போது லஞ்சம் பெற்றதாக கைது செய்யப்பட்டது இது முதன்முறை என கூறப்படுகிறது. எனவே, துணைவேந்தர் கணபதி பணிநீக்கம் செய்யப்படலாம் என தெரிகிறது.

கணபதியுடன், அண்ணா பல்கலைக்கழக கோவை மண்டல மையத்தின் முன்னாள் துணைவேந்தர் ராதாகிருஷ்ணனும் தற்போது கோவை சிறையில் உள்ளார். பதவியில் இருந்தபோது வருமானத்துக்கு அதிகமான சொத்து சேர்த்ததாக தொடரப்பட்ட வழக்கில், தண்டனையை எதிர்த்து மேல்முறையீடு செய்ததில் அவருக்கு தண்டனை உறுதி செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

SCROLL FOR NEXT