சென்னை: சென்னை மாவட்டத்தில் வட சென்னை, தென் சென்னை, மத்திய சென்னை ஆகிய 3 மக்களவை தொகுதிகளில் தாக்கல் செய்யப்பட்ட வேட்பு மனுக்கள் மீதான பரிசீலனை நேற்று நடைபெற்றது.
வட சென்னையில் பாஜக வேட்பாளர் பால்கனகராஜ், திமுக வேட்பாளர் கலாநிதி வீராசாமி, அதிமுக வேட்பாளர் ராயபுரம் மனோ, நாம்தமிழர் கட்சி வேட்பாளர் அமுதினிவேட்புமனுக்கள் ஏற்கப்பட்டன.
தென் சென்னை தொகுதியில் திமுக வேட்பாளர் தமிழச்சி தங்கபாண்டியன், பாஜக வேட்பாளர் தமிழிசை சவுந்தரராஜன், அதிமுக வேட்பாளர் ஜெ.ஜெயவர்தன், நாம் தமிழர் கட்சி வேட்பாளர் சு.தமிழ்ச்செல்வி ஆகியோரின் மனுக்கள் ஏற்கப்பட்டன.
மத்திய சென்னை தொகுதியில் பாஜக வேட்பாளர் வினோஜ் பி.செல்வம், திமுக வேட்பாளர் தயாநிதி மாறன், தேமுதிக வேட்பாளர் பார்த்தசாரதி, நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர் கார்த்திகேயன் உள்ளிட்டோரின் வேட்பு மனுக்கள் ஏற்கப்பட்டன.
புகார் அளிக்கலாம்: சென்னை மாவட்ட தேர்தல் அலுவலகம் வெளியிட்ட செய்திக்குறிப்பு: சென்னை மாவட்டத்தில் உள்ள 3 மக்களவை தொகுதிகளுக்கு நியமிக்கப்பட்டுள்ள தேர்தல் பொது பார்வையாளர்களை, தேர்தல் விதிமீறல் தொடர்பாக புகார் அளிப்பதற்காக சென்னை சேப்பாக்கம், வாலாஜா சாலையில் உள்ள புதிய அரசு விருந்தினர் மாளிகை கூட்ட அரங்கில் சந்திக்கலாம். தேர்தல் பொது பார்வையாளர்களின் கைபேசி எண், சந்திக்கும் நேரம் தனித்தனியாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி வட சென்னை மக்களவை தொகுதியில் (திருவொற்றியூர், ஆர்.கே.நகர், ராயபுரம், பெரம்பூர், கொளத்தூர், திரு.வி.க.நகர் சட்டப்பேரவை தொகுதிகள்) தேர்தல் பொது பார்வையாளராக கார்த்திகேய் தன்ஜி புத்தப்பாட்டி (94459 10953) நியமிக்கப்பட்டுள்ளார். இவரை மாலை 4 மணி முதல் 5 மணி வரை சந்திக்கலாம்.
மத்திய சென்னை தொகுதியில் (வில்லிவாக்கம், எழும்பூர், அண்ணாநகர் துறைமுகம், சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி மற்றும் ஆயிரம் விளக்கு) பொது பார்வையாளராக டி.சுரேஷ் (94459 10956) நியமிக்கப்பட்டுள்ளார். இவரை காலை 11.30 மணி முதல் பிற்பகல் 12.30 மணி வரை சந்திக்கலாம்.
தென் சென்னை தொகுதியில் (விருகம்பாக்கம், தியாகராய நகர், மயிலாப்பூர், சைதாப்பேட்டை, வேளச்சேரி மற்றும் சோழிங்கநல்லூர்) பொது பார்வையாளராக முத்தாடா ரவிச்சந்திரா (94459 10957) நியமிக்கப்பட்டுள்ளார். இவரை காலை 11 மணி முதல் பகல் 12 மணி வரை சந்திக்கலாம். இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.