சென்னை: மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் டெல்லி முதல்வர் அர்விந்த் கேஜ்ரிவால் அமலாக்கத் துறையால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இதற்கு பல்வேறு கட்சி தலைவர்கள் கண்டனம் தெரிவித்து வரும் நிலையில் தமிழக ஆம் ஆத்மி கட்சிசார்பில், அக்கட்சியின் தமிழக தலைவர் வசீகரன் தலைமையில் சென்னை வள்ளுவர் கோட்டத்தில் நேற்று காலை அறவழி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இதில், தமிழக அளவில் அக்கட்சியின் பொதுச் செயலாளர் ஜோசப் ராஜா, மத்திய சென்னை மாவட்ட தலைவர் ஆரிப் உட்பட 100-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
மேலும், இதில் திமுக, காங்கிரஸ், கம்யூனிஸ்ட் உட்பட இண்டியா கூட்டணி கட்சியின் மாவட்ட தலைவர்கள் பங்கேற்றனர். கூட்டத்தில் பங்கேற்றவர்கள் அர்விந்த் கேஜ்ரிவாலின் முகத் தோற்றம் கொண்ட முகக் கவசங்களை அணிந்து கொண்டு கெஜ்ரிவால் கைதை கண்டித்து கோஷமிட்டனர்.
முன்னதாக, ஆம் ஆத்மி கட்சியின் தமிழக தலைவர் வசீகரன் கூறுகையில், ‘அர்விந்த் கேஜ்ரிவாலின் கைது உள்நோக்கம் கொண்டது. அவரை சிறையில் அடைப்பதால் வெற்றி பெற்று விடலாம் என பாஜக நினைக்கிறது.
தற்போது அவர் கைது செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து பல்வேறு இடங்களில் போராட்டம் நடைபெற்று வருகிறது. அதுவே பிரச்சாரமாகி அனைத்து இடங்களிலும் இண்டியா கூட்டணி வெற்றி பெறும்.கேஜ்ரிவாலை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும்’ என்றார்.