மேட்டூர்: “தமிழகத்தில் உள்ள 234 தொகுதிகளில் 110 தொகுதிகளில் பாமகவே கிடையாது” என வேட்பாளர் அறிமுக கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் கே.பி.அன்பழகன் பேசினார்.
மேட்டூர் தனியார் திருமண மண்டபத்தில் தருமபுரி மக்களவை தொகுதி அதிமுக வேட்பாளர் அசோகன் அறிமுக கூட்டம் இன்று நடந்தது. இந்தக் கூட்டத்துக்கு சேலம் புறநகர் மாவட்ட செயலாளர் இளங்கோவன் தலைமை தாங்கினார். இதில் அதிமுக முன்னாள் அமைச்சரும், தருமபுரி மாவட்ட செயலாளருமான கே.பி.அன்பழகன் கலந்து கொண்டு வேட்பாளரை அறிமுகப்படுத்தி பேசினார். தொடர்ந்து, வேட்பாளர் அறிமுக கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் கே.பி.அன்பழகன் பேசுகையில், “மாற்று கட்சியை சேர்ந்தவர் நம்முடன் சேர்ந்து குதிரை சவாரி செய்து, வெற்றி பெற்று காணாமல் போய்விடுகிறார்கள். மேட்டூர், பென்னாகரம், தருமபுரி தொகுதியில் பாமகவை சேர்ந்த எம்எல்ஏக்கள் வெற்றி பெற காரணம், அதிமுக தொண்டர்கள் தான்.
தற்போது, அவர்கள் நம்மிடம் இருந்து ஓடி விட்டார்கள். அதுவும் நல்லது தான். தமிழகத்தில் உள்ள 234 தொகுதிகளில் 110 தொகுதிகளில் பாமகவே கிடையாது. நம்முடைய கூட்டணியில் அவர்கள் தேவையில்லை. ஆரணி, திண்டிவனம், கடலூர் உள்ளிட்ட தொகுதிகள் உள்ளன. ஆனால், திண்டிவனத்தில் இருந்து தருமபுரியை நோக்கி வருகிறார்கள். இங்குள்ள மக்களை ஏமாற்ற தான் வருகிறார்கள்.
ஜெயலலிதா மறைவுக்கு பிறகு, ஆட்சியிலும், எதிர்கட்சியாகவும் 7 ஆண்டுகள் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, ஒரு நாள் கூட நிம்மதியாக இருந்ததில்லை. 2 கோடி தொண்டர்களை காப்பாற்ற, எத்தனை வழக்குகள் வந்தாலும், அதில் வெற்றி பெற்று தொண்டர்களையும், கட்சியையும் காப்பாற்றியுள்ளார்.
அதிமுக கட்சி மூலம் முதல்வர் உள்ளிட்ட பல பதவிகளை இருந்த பன்னீர் செல்வம், தேர்தலின் போது கூட இரட்டை இலை சின்னத்தை முடக்க நினைத்தார். அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் சந்திக்கும் முதல் தேர்தலில் மிகப்பெரிய வெற்றி பெற வேண்டும்.
2014-ம் ஆண்டு மக்களவை தேர்தலில் தனியாக போட்டியிட்டு, 37 இடங்களில் வெற்றி பெற்று, இந்தியாவில் 3வது பெரிய கட்சியாக அதிமுகவை ஜெயலலிதா உருவாக்கினார். அதேபோல், 2011-ம் ஆண்டு தேமுதிகவுடன் கூட்டணி வைத்து, தேர்தலில் வெற்றி பெற்று முதல்வராக ஜெயலலிதாவும், எதிர்கட்சி தலைவராக விஜயகாந்த் இருந்தனர். இதனால் திமுக இருக்கின்ற இல்லாத நிலை உருவானது. அதே நிலை தற்போது உருவாக்க வேண்டும். அப்போது தான் பாமகவும் காணாமல் போகும்” என்றார்.