சிவகாசி: “ஓர் இளைஞனாக விருதுநகர் தொகுதியில் நிற்கிறேன். ஒருநாள் அரசியலுக்கு வருவேன் என்று தெரியும். ஆனால், இவ்வளவு சீக்கிரம் வருவேன் என்று தெரியாது. இது காலத்தின் கட்டாயம்” என விருதுநகர் தேமுதிக வேட்பாளர் விஜய பிரபாகரன் தெரிவித்துள்ளார்.
விருதுநகர் மாவட்டம் சிவகாசி பாவாடி தோப்பு பகுதியில் அதிமுக கூட்டணி சார்பில் பிரச்சார பொதுக்கூட்டம் மாலை நடைபெற்றது. இதில் அதிமுக கூட்டணியில் தேமுதிக சார்பில் விருதுநகர் மக்கவைத் தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர் விஜய பிரபாகரன் பேசுகையில், “ஒரு இளைஞனாக விருதுநகர் தொகுதியில் நிற்கிறேன். ஒருநாள் அரசியலுக்கு வருவேன் என்று தெரியும். ஆனால் இவ்வளவு சீக்கிரம் வருவேன் என்று தெரியாது. இது காலத்தின் கட்டாயம்.
விஜயகாந்தின் சொந்த மண்ணான விருதுநகர் தொகுதியில் போட்டியிடுகிறேன். இந்த பந்தம் என்றுமே விட்டுப் போகாது. எம்ஜிஆர், கருப்பு எம்ஜிஆர் என்ற உறவு இன்றும் தொடர்கிறது” என்றார்.
முன்னதாக தேமுதிக வேட்பாளர் விஜய பிரபாகரனை ஆதரித்து பேசிய அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி, “விளையும் பயிர் முளையிலேயே தெரியும் என்பது போல் விஜய பிரபாகரன் உள்ளார்” என்றார்.
மேலும், “திமுக அரசின் ஊழல்களை துறைகள் வாரியாக பட்டியலிட்டு ஆதாரங்களுடன் ஆளுநரிடம் நாங்கள் மனு அளித்தோம். முதல்வரின் மருமகனும் மகனும் ரூ.30 ஆயிரம் கோடி சம்பாதித்து உள்ளதாக திமுக அமைச்சர் பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜன் ஆடியோவில் பேசி உள்ளார். அந்தப் புகார் மனுவை ஆளுநர் விசாரித்து இருந்தால் மக்களவைத் தேர்தலுடன் சட்டப்பேரவை தேர்தலும் வந்திருக்கும். ஆளுநர் நடுநிலையோடு செயல்பட வேண்டும்” என்றார். முழுமையாக வாசிக்க: “ஆளுநர் நடுநிலையுடன் செயல்பட்டு இருந்தால்...” - இபிஎஸ் ஆதங்கப் பேச்சு @ சிவகாசி