டி.ஆர்.பி.ராஜா 
தமிழகம்

“கோவைக்கு மகத்தான வளர்ச்சி காத்திருக்கிறது” - அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா கருத்து

செய்திப்பிரிவு

கோவை: கோவை மக்களவை தொகுதி திமுக பொறுப்பாளர் அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா நேற்று செய்தியாளர்களிடம் கூறியதாவது: தமிழகத்தில் ஜனநாயகம் செழித்தோங்க வேண்டும். அதை பாதுகாக்க வேண்டும் என்று ஒவ்வொரு நாளும் ஜனநாயகத்தை கட்டிக் காத்துக் கொண்டிருக்கும் முதல்வர் ஸ்டாலின் ஆட்சியில் தமிழகம் அமைதிப் பூங்காவாக உள்ளது.

பெரிய இயக்கத்தில் இருந்து கொண்டு கொச்சைப்படுத்தும் அளவுக்கு சிலரது செயல்பாடு உள்ளது. அது அந்தக் கட்சியினருக்கே பிடிக்கவில்லை என்பதுதான் உண்மை. தமிழகம் ஜனநாயகம் மற்றும் நாகரீக அரசியலுக்கு பெயர் பெற்ற ஒரு மாநிலமாக திகழ்கிறது. அனைவரும் இணைந்து இந்த மாநிலத்தின் ஒட்டுமொத்த வளர்ச்சிக்காக பாடுபடுகின்றனர். பத்து ஆண்டுகள் மத்திய அரசு ஒன்றும் சாதிக்கவில்லை. ஆனால் இரண்டரை ஆண்டுகளில் முதல்வர் ஸ்டாலின் ஆட்சியில் இந்தியாவின் முதன்மை மாநிலமாக தமிழகம் திகழ்கிறது.

மாநிலத்திலும் சரி. ஒன்றியத்திலும் சரி இண்டியா கூட்டணி ஆட்சி அமைக்கக்கூடிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. மகத்தான வளர்ச்சி கோவைக்கு காத்திருக்கிறது. இன்னும் ஆறு மாதங்களில் மக்கள் அதை காணப் போகின்றனர். கோவைக்கு அடுத்த கட்ட நகர்வு மிகச் சிறப்பான நகர்வாக இருக்கும். தேர்தல் முடிந்தவுடன் விமான நிலைய விரிவாக்கம் உள்ளிட்ட கோவையின் அனைத்து வளர்ச்சி பணிகளும் சிறப்பாக இருக்கும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

SCROLL FOR NEXT