கோவை: டெல்லியில் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த ஈஷா நிறுவனர் சத்குரு, சிகிச்சை முடிந்து நேற்று டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார்.
கோவை ஈஷா யோகா மைய நிறுவனர் சத்குரு, கடந்த சில நாட்களாக கடும் தலைவலியால் அவதிப்பட்டு வந்தார். இந்நிலையில், டெல்லியில் நடைபெற்ற ஒரு நிகழ்வில் பங்கேற்பதற்காக சென்ற அவர், தலைவலி அதிகரித்ததால், கடந்த 17-ம் தேதி அங்குள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பரிசோதனையில் சத்குருவுக்கு மூளைப்பகுதியில் பாதிப்பு ஏற்பட்டிருப்பது கண்டறியப்பட்டது.
தொடர்ந்து, அவரது தலையில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த அவரது உடல்நிலைகுறித்து பிரதமர் மோடி உள்ளிட்ட பல முக்கியப் பிரமுகர்கள் விசாரித்தனர். அறுவை சிகிச்சைக்குப் பின்னர் மருத்துவர்கள் கண்காணிப்பில் இருந்த சத்குரு, 10 நாட்களுக்குப் பிறகு நேற்று மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார்.
முன்னதாக, மருத்துவமனையின் இணை நிர்வாக இயக்குநர் டாக்டர் சங்கீதா ரெட்டி, சத்குருவிடம் நலம் விசாரித்தார். இதுகுறித்து மருத்துவர் சங்கீதா ரெட்டி கூறும்போது, ‘‘சத்குரு உடல்நலம் தேறி வருவது குறித்து மருத்துவர்கள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.
மேலும், தனது உற்சாகத்தையும் அவர் தக்கவைத்துள்ளார். உலகளாவிய நன்மைக்கான அவரது அர்ப்பணிப்பு, புத்திக் கூர்மை, நகைச்சுவை உணர்வு அனைத்தும் அப்படியே உள்ளன. அவரது உடல்நலம் குறித்து விசாரிக்கும் லட்சக்கணக்கான மக்களுக்கு இது நற்செய்தியாக இருக்கும்,’’ என்றார். சத்குருவுக்கு சிகிச்சை அளித்த மருத்துவக் குழுவுக்கு, ஈஷா அறக்கட்டளை சார்பில் நன்றி தெரிவிக்கப்பட்டுள்ளது.