தமிழகம்

சென்னையில் பல்வேறு இடங்களில் ஆவின் பால் விநியோகம் தாமதம்: பொதுமக்கள் பாதிப்பு

செய்திப்பிரிவு

சென்னை: ஒப்பந்த தொழிலாளர்கள் போராட்டம் காரணமாக, சென்னையில் 9 பகுதிகளில் ஆவின் பால் விநியோகம் நேற்று பாதிக்கப்பட்டது. இன்று வழக்கம்போல பால் விநியோகம் செய்யப்படும் என்று ஆவின் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

சென்னையில் ஆவின் நிறுவனம் வாயிலாக 14.20 லட்சம் லிட்டர் ஆவின் பால் பாக்கெட்கள் விற்பனை செய்யப்படுகின்றன. இவற்றில், அம்பத்தூர் பால் பண்ணையில் 4.20 லட்சம் லிட்டர் பாக்கெட் பால் தயாரித்து விற்பனை செய்யப்படுகின்றன.

இந்நிலையில், அம்பத்தூர் பால் பண்ணையில் லாரிகள் மூலமாக பால் விநியோகம் செய்யும் ஒப்பந்த ஊழியர்கள் போராட்டம் காரணமாக, ஆவின் பால் விநியோகம் பாதிக்கப்பட்டது.

பால் பண்ணையில் இருந்து லாரிகள் மூலமாக பால் விநியோகம் செய்ய ஒப்பந்த அடிப்படையில் தொழிலாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். லாரிகள் மூலமாக பால் விநியோகம் செய்யும் ஒப்பந்த நிறுவனத்துக்கு கொடுக்க வேண்டிய தொகையை குறைத்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. அதாவது, பால் விநியோகம் செய்யும் வாகனங்களுக்கு டீசல் கட்டணத்தை ஆவின் நிறுவனம் குறைத்துள்ளது.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, ஒப்பந்த தொழிலாளர்கள் நேற்று முன்தினம் இரவு திடீரென போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து, ஆவின் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தியதால் தீர்வு ஏற்பட்டது. இதன்பிறகு, போராட்டம் திரும்ப பெறப்பட்டது.

இருப்பினும், சென்னைபெரம்பூர், அண்ணாநகர், அயனாவரம், வில்லிவாக்கம், கொரட்டூர், மயிலாப்பூர், வேளச்சேரி, தாம்பரம், அடையாறு ஆகிய பகுதிகளில் பால் விநியோகத்தில் பாதிப்பு ஏற்பட்டது. காலை 6 மணிக்கு கிடைக்க வேண்டிய ஆவின் பால் 8 மணிக்குதான் கிடைத்தது. இதனால், பொதுமக்கள் சிரமப்பட்டனர்.

இதுகுறித்து ஆவின் அதிகாரிகளிடம் கேட்டபோது, ``பால் விநியோகம் செய்ய ஒப்பந்த அடிப்படையில் தனியார் வாகனங்கள் நியமிக்கப்பட்டுள்ளன. டீசல் விலை உயரும்போது, அவர்களுக்கு கட்டணம்உயர்த்தி கொடுக்கப்படும். அதேபோல, டீசல் விலை குறைக்கும்போது,கட்டணம் குறைக்கப்படும். தற்போது,டீசல் விலை குறைந்ததால், இதன்கட்டணம் குறைக்கப்பட்டது.

இதற்குஎதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினோம். அவர்கள் ஏற்றுக்கொண்டார்கள். வியாழக்கிழமை முதல் வழக்கம்போல பால் விநியோகம் செய்யப்படும்'' என்றனர்.

SCROLL FOR NEXT