மதுராந்தகம்: மதுராந்தகம் நகரில் பாமக வேட்பாளரை ஆதரித்து நேற்று முன்தினம் பிரச்சாரத்தில் ஈடுபட்ட அக்கட்சியின் நிறுவனர் ராமதாஸ், சமூக நீதிக்காக போராடும் ஒரே கட்சி பாமக என்று பெருமிதம் தெரிவித்துள்ளார்.
செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம் நகரில் நேற்று முன்தினம்இரவு, காஞ்சிபுரம் மக்களவைத் தொகுதியில் பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர் ஜோதி வெங்கடேசனை ஆதரித்து, வாக்கு சேகரிக்கும் வகையில் அக்கட்சியின் நிறுவனர் ராமதாஸ் பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.
அப்போது அவர் பேசியதாவது: தமிழகத்தில் 10 மக்களவைத்தொகுதிகளில் பாமக போட்டியிடுகிறது. இதில், 3 பேர் பெண் வேட்பாளர்களாக உள்ளனர். பெண்கள் நினைத்தால் எதையும் சாதிக்க முடியும். சாதிக்க பிறந்தவர்கள் பெண்கள். சாதனையாளர்கள் பெண்கள். அதனால்தான் ஆவதும்பெண்ணாலே அழிவதும் பெண்ணாலே என்று சொல்கிறோம். சமூக நீதி என்பது திமுகவுக்கு தெரியாது. சமூக நீதியை மொத்தமாக குத்தகைக்கு எடுத்து அதற்காக போராடி வரும் ஒரு கட்சி பாமக மட்டும் தான்.
மூன்றாவது முறையாக மோடி: காங்கிரஸுடன் 20 ஆண்டு காலகூட்டணியில் இருந்தது திமுக. அந்த காலத்திலேயே மத்தியில் கூட்டாட்சி, மாநிலத்தில் சுய ஆட்சிஎன வசனங்களை தான் நாம் கேட்டோமே தவிர, உருப்படியாக இவர்கள் எதையும் அங்கே போராடி, வாயாடி பெறவில்லை. மத்தியிலே 20 ஆண்டுகாலம் இருந்தும் என்ன பயன்.
இந்தியா மட்டுமல்ல உலக அளவில் பேசப்படும் ஒரே பிரதமர் நரேந்திர மோடி. நேரு, இந்திரா காந்தி பிரதமராக இருந்தார்கள். அதற்கு அடுத்தபடியாக மோடி மூன்றாவது முறையாக வெற்றி பெற்று பிரதமர் ஆவார்.
விவசாயத்தைப் பற்றி கவலைப்படும் ஒரே கட்சி பாட்டாளி மக்கள்கட்சிதான். அம்பானிக்கும் அவரதுபேரப் பிள்ளைகளுக்கும் கிடைக்கும் கல்வி கிராமத்தில் உள்ள குழந்தைகளுக்கும் கிடைக்க வேண்டும். அதேபோல், ஜனாதிபதிக்கு கிடைக்கும் மருத்துவம் ஏழை குடும்பத்தை சேர்ந்த மக்களுக்கும் கிடைக்க வேண்டும் என்பதுதான் பாட்டாளி மக்கள் கட்சியின் ஒரே கொள்கை, நோக்கம்.
கடவுள் மும்மூர்த்திகள் என் முன் தோன்றி உனக்கு என்ன வரம் வேண்டும் என்று கேட்டால், மது இல்லா தமிழகம் மற்றும் மழை நீர் ஒரு சொட்டு கூட கடலில் கலந்து வீணாகக்கூடாது என இந்த இரு வரங்களை கேட்பேன். இவ்வாறு அவர் பேசினார். இதில், அக்கட்சியின் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் என பலர் கலந்துகொண்டனர்.