தன்னை சந்தித்த எம்.எல்.ஏ., பிரபு ஸ்லீப்பர் செல் இல்லை என டிடிவி தினகரன் கூறியுள்ளார்.
ஆர்.கே.நகர் தொகுதி எம்.எல்.ஏ., டிடிவி தினகரனை கள்ளக்குறிச்சி அதிமுக எம்.எல்.ஏ., பிரபு இன்று (வெள்ளிக்கிழமை) காலை திடீரென சந்தித்தார். சென்னை அடையாறில்
உள்ள டிடிவி தினகரன் இல்லத்தில் சந்தித்த அவர் பூங்கொத்து கொடுத்து தினகரனுக்கு தனது ஆதரவைத் தெரிவித்தார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த டிடிவி தினகரன், "இன்று என்னை சந்தித்த கள்ளக்குறிச்சி எம்.எல்.ஏ ஸ்லீப்பர் செல் அல்ல. ஆனால், எம்எல்ஏக்கள் பலர் என்னுடன் தொடர்பில் உள்ளனர். நம்பிக்கை வாக்கெடுப்பு நடந்தால் மட்டுமே ஸ்லீப்பர் செல்கள் வெளிப்படுவார்கள். துணை முதல்வர் உள்ளிட்ட 6 பேரை தவிர அனைத்து எம்எல்ஏக்களும் எங்கள் அணியில் இணைந்து விடுவார்கள்.
எடப்பாடி பழனிசாமி ஆட்சிக்கு வந்து ஓராண்டு ஆவதால் ஓ.பன்னீர்செல்வம் முதல்வர் பதவியைக் கேட்கிறார். முதல்வர் பதவி கிடைக்காத விரக்தியில்தான் ஓபிஎஸ், மோடி கூறியே அணிகள் இணைப்பு நடந்தது என்றெல்லாம் பேசி வருகிறார்" எனத் தெரிவித்தார்.