தமிழகம்

சீட் தராததால் விருதுநகரில் சுயேச்சையாக களம் இறங்கிய பாஜக நிர்வாகி

இ.மணிகண்டன்

விருதுநகர்: பாஜகவில் தனக்கு சீட் கொடுப்படாததால் விருதுநகர் தொகுதியில் ராதிகாவை எதிர்த்து ‘டெல்லி பாஜக மோடி அணி’ என்ற பெயரில் பாஜக நிர்வாகி சுயேச்சையாக களம் இறங்கியுள்ளார்.

மக்களவைத் தேர்தலில் பாஜக சார்பில் வேட்பாளரை அறிவிப்பதில் கடும் போட்டி இருந்தது. தொடக்கத்தில், விருதுநகர் கிழக்கு மாவட்டத் தலைவர் பாண்டுரங்கன், பாஜக மாநில பொதுச் செயலாளர் ராம சீனிவாசன், டெல்லியில் பிரதமர் அலுவலகத்தில் நீதித்துறை பத்திரிகையாளராகப் பணியாற்றி வரும் (Judicial Journalist) வேதா தாமோதரன் ஆகியோர் பெயர் அடிபட்டது.

விருதுநகர் மக்களவைத் தொகுதியில் போட்டியிட தனக்கு சீட் வேண்டும் என வேதா தாமோதரன் டெல்லியில் உள்ள பாஜக தலைமை அலுவலகத்திலும் விருப்ப மனு தாக்கல் செய்தார். மேலும், தனக்கு வாய்ப்புக் கொடுக்கப்படவில்லையெனில் திருமங்கலம் டோல்கேட்டில் மறியலில் போராட்டத்தில் ஈடுபடுவேன் என்றும் கூறியிருந்தார். அதோடு, மக்கள் செல்வாக்கும் சமுதாய பின்புலமும் தனக்கு உள்ளதாகவும், அதனால் வெற்றிபெறுவதற்கான வாய்ப்பு அதிகம் என்பதால் தனக்கு சீட் வழங்க வேண்டும் என்றும் வேதா தாமோதரன் கூறியிருந்தார்.

இதற்கிடையே, சமத்துவ மக்கள் கட்சி பாஜகவுடன் இணைக்கப்பட்டது. அதையடுத்து, அக்கட்சியின் துணைப் பொதுச் செயலாளாகப் பொறுப்பு வகித்து வந்த நடிகை ராதிகா விருதுநகர் மக்களவைத் தொகுதி பாஜக வேட்பாளராக அறிவிக்கப்பட்டார். கடந்த 25-ம் தேதி வேட்பு மனுத் தாக்கல் செய்த நடிகை ராதிகா, தனது கணவர் சரத்குமாருடன் இணைந்து தற்போது தொகுதியில் தீவிர பிரச்சாரத்தைத் தொடங்கியுள்ளார்.

இந்நிலையில், தனக்கு வாய்ப்பு கொடுக்கப்படாததால் ‘டெல்லி பாஜக மோடி அணி’ என்ற பெயரில் வேதா தமோதரன் சுயேட்சை வேட்பாளராக விருதுநகர் மக்களவைத் தொகுதியில் போட்டியிட இன்று வேட்புமனுத் தாக்கல் செய்தார். இவர், மதுரை மாவட்டம் திருமங்லம் அருகே உள்ள வீரார்பட்டியைச் சேர்ந்தவர். மதுரை மேற்கு மாவட்ட பாஜக விவசாய அணி செயற்குழு உறுப்பினராகப் பொறுப்பு வகித்து வருகிறார்.

இது குறித்து, வேதா தாமோதரன் இன்று அளித்த பேட்டியில், “விருதுநகர் தொகுதியில் போட்டியிட பாஜக சார்பில் எனக்கு சீட் கொடுக்கப்படவில்லை. அதனால்தான், தனி அணியாக ‘டெல்லி பாஜக மோடி அணி’ சார்பில் சுயேச்சை வேட்பாளராக போட்டியிடுகிறேன். லட்சிய திமுகவைப் போல நான் துணிச்சலாக நிற்கிறேன். தமிழக பாஜக சார்பில் அல்ல, டெல்லி பாஜக மோடி அணி சார்பில் போட்டியிடுகிறேன்.

பாஜக வேட்பாளர் ராதிகாவை மட்டும் அல்ல, அனைத்து வேட்பாளர்களையும் எதிர்த்துதான் போட்டியிடுகிறேன். காங்கிரஸ் கட்சியில் இந்திரா காங்கிரஸ், திரிணாமுல் காங்கிரஸ், தமிழ் மாநில காங்கிரஸ் என உள்ளதுபோல் பாஜகவிலிருந்து தனி அணி வரக் கூடாதா. வரலாம். அதில் தவறு ஏதும் இல்லை” என்று கூறினார். இதனால், பாஜகவில் உட்கட்சி பூசல் வெடித்துள்ளது.

அதோடு, பாஜக சார்பில் அதிகார்ப்பூர்வ வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள ராதிகாவை எதிர்த்து, பாஜக நிர்வாகியே போட்டியிடுவது பாஜகவினரிடையே அதிர்ச்சியையும் அதிருப்தியையும் ஏற்படுத்தியுள்ளது.

SCROLL FOR NEXT