வேட்புமனு தாக்கல் செய்த திருமாவளவன் 
தமிழகம்

“சின்னம் ஒதுக்குவதில் தேர்தல் ஆணையம் ஒருதலைப்பட்சம்” - திருமாவளவன் கண்டனம்

பெ.பாரதி

அரியலூர்: சிதம்பரம் மக்களவைத் தொகுதியில் போட்டியிட விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் தனது வேட்பு மனுவை இன்று ( மார்ச் 27 ) தாக்கல் செய்தார்.

மக்களவைத் தேர்தலையொட்டி தமிழகத்தில் முதல் கட்டமாக ஏப்.19-ம் தேதி அன்று வாக்குப்பதிவு நடைபெறுகிறது. வேட்பு மனு தாக்கலுக்கு இன்றே (மார்ச் 27) கடைசி நாள் என்பதால் வேட்பாளர்கள் தங்களது வேட்பு மனுவை தாக்கல் செய்து வருகின்றனர். இந்நிலையில், திமுக கூட்டணியில் சிதம்பரம் மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் தனது வேட்பு மனுவை, அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், மாவட்ட ஆட்சியரும், சிதம்பரம் மக்களவைத் தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலருமான ஆனி மேரி ஸ்வர்ணாவிடம் தனது வேட்பு மனுவை தாக்கல் செய்தார்.

அவருடன் வேளாண்மைத் துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், போக்குவரத்துத் துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர், அரியலூர் எம்எல்ஏ கு.சின்னப்பா, காங்கிரஸ் மாவட்டத் தலைவர் ஆ.சங்கர் ஆகியோர் உடன் இருந்தனர். வேட்பு மனுவை தாக்கல் செய்த பின்னர் திருமாவளவன் உறுதிமொழி எடுத்துக் கொண்டார்.

தொடர்ந்து செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், “பாஜகவுக்கு எதிரான கட்சிகளுக்கு சின்னம் ஒதுக்குவதில் தேர்தல் ஆணையம் ஒரு தலைப்பட்சமாக செயல்படுகிறது. பாஜகவுக்கு ஆதரவான கட்சிகளுக்கு உடனடியாக சின்னங்களை தேர்தல் ஆணையம் ஒதுக்குகிறது. தேர்தல் ஆணையம் இந்த தேர்தலை நேர்மையோடு நடத்த வேண்டும். அப்போது தான் ஜனநாயகம் காக்கப்படும். தமிழ்நாட்டை பொறுத்தவரை பாஜக ஒரு பூஜ்ஜியம். இதனை திமுக தலைவர் மு.க.ஸ்டாலினே கூறியுள்ளார். தென்னிந்திய மாநிலங்களில் பாஜக கடும் தோல்வியை சந்திக்கும்.” எனக் கூறினார்.

SCROLL FOR NEXT