மதிமுக போட்டியிடும் சின்னம் தொடர்பாக உணர்ச்சிவசப்பட்டு பேசிய அந்த ஒருநாள் நிகழ்வை கடந்து செல்வோம் என்று மதிமுக முதன்மைச் செயலாளரும், திருச்சி தொகுதி வேட்பாளருமான துரை வைகோ தெரிவித்தார். இதுகுறித்து ‘இந்து தமிழ்’ நாளிதழுக்கு அவர் அளித்த சிறப்பு நேர்காணல்:
முதன்முதலில் தேர்தலில் போட்டியிடும் உங்களுக்கு திருச்சி எப்படி உள்ளது? - திருச்சி மக்கள், கட்சி எல்லைகள், ஜாதி, மத வேறுபாடுகளுக்கு அப்பாற்பட்டு பணியாற்றும் அரசியல்வாதிகளுக்கு உரிய அங்கீகாரம் கொடுப்பார்கள் என்ற நம்பிக்கை உள்ளது.
திருச்சியில் நடைபெற்ற வேட்பாளர் அறிமுகக் கூட்டத்தில் மிகவும் உணர்ச்சிவசப்பட்டு பேசினீர்கள். இதனால், பிரச்சாரத்தில் திமுகவினர் உறுதுணையாக இருப்பார்கள் என நம்புகிறீர்களா? - பாஜக வீழ்த்தப்பட வேண்டும் என்ற கருத்தில்தான் திமுக, மதிமுக ஒன்றிணைந்துள்ளோம். இதில் ஒவ்வொரு இயக்கத்துக்கும் சிறுசிறு கருத்து வேறுபாடுகள் இருக்கும். தேர்தல் பரப்புரையில் கூட வரலாம். ஆனால் முக்கியமான நோக்கத்தை நிறைவேற்றத்தான் இண்டியா கூட்டணிக் கட்சிகள் ஒன்றிணைந்துள்ளன.
அன்று ஒரு நாள் நிகழ்வால் எந்த பாதகமும் வராது. நான் வேட்புமனு தாக்கல் செய்ய சென்றபோது, அமைச்சர் கே.என்.நேரு, நல்ல நேரம் பார்த்து ஆட்சியர் அலுவலகம் வரை வந்து வாழ்த்தி வழியனுப்பி வைத்தார். திமுக உள்ளிட்ட கூட்டணி கட்சியினர் உறுதுணையாக உள்ளனர். அந்த ஒரு நாள் நிகழ்வை கடந்து செல்வோம்.
கூட்டணியில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக், விசிக போன்ற கட்சிகள் தனிச் சின்னத்தில் போட்டியிடும்போது, மதிமுகவை மட்டும் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட வேண்டும் என ஏன் கூறுகின்றனர்? - எங்களுக்கு பம்பரம் சின்னம் கிடைக்குமா, கிடைக்காதா என்ற நிலையில், பிரச்சாரத்தின்போது சொல்லும்படியான சின்னம் இருந்தால் கூட்டணிக்கு நன்றாக இருக்குமே என்ற எண்ணத்தில் திமுகவினர் சிலர் உதயசூரியன் சின்னத்தில் நிற்கும்படி கேட்டனர்.
அதுவும் வேண்டுகோளாகத்தான் வைத்தனர். அதேநேரத்தில் எங்களுடைய தனித்தன்மை, அடையாளத்தை தக்கவைக்க விரும்புகிறோம். நாங்களும் எங்களுடைய பதிலை தெரிவித்துவிட்டோம்.
கூட்டத்தில் நீங்கள் உணர்ச்சிவசப்பட்டு பேசியது தொடர்பாக உங்களது தந்தை (வைகோ) என்ன சொன்னார்? - இதுதொடர்பாக தலைவரிடம் பேசவில்லை. அவரும் கேட்கவில்லை. அது முடிந்துபோன ஒரு சம்பவம்.
வெளியூர் வேட்பாளரான நீங்கள், பிரச்சாரக் களத்தில் உள்ளூர் வேட்பாளர்களை எப்படி சமாளிப்பீர்கள்? - நான் தமிழ்நாட்டுக்காரன். எனக்கு எல்லாமே என் ஊர்தான். அன்னை தெரசா, சேகுவேரா போன்றவர்கள் மக்களுக்கு ஆற்றிய சேவை தெரியும். அதற்காக அவர்கள் அளவுக்கு என்னை ஒப்பிடவில்லை. மக்கள் சேவைக்கு இனம், மதம், ஜாதி, ஊர் இதெல்லாம் ஒரு பொருட்டே கிடையாது. ஜாதி, மதத்தை கடந்து செயல்படுபவர்களை மக்கள் எப்போதும் ஆதரிப்பார்கள்.