தூத்துக்குடி: தூத்துக்குடி தொகுதி திமுக வேட்பாளர் கனிமொழி நேற்று (மார்ச் 26) காலை 11 மணியளவில், தூத்துக்குடி - எட்டயபுரம் சாலையில் திமுக அலுவலகம் முன்புள்ள முன்னாள் முதல்வர் கருணாநிதி சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
பின்னர் கூட்டணி கட்சியினருடன் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கு சென்று, வேட்புமனுவை தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர் கோ.லட்சுமிபதியிடம் தாக்கல் செய்தார். அமைச்சர்கள் பெ.கீதாஜீவன், அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன், தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி துணைத் தலைவர் ஏ.பி.சி.வி.சண்முகம் ஆகியோர் உடனிருந்தனர்.
கனிமொழி சார்பில் 2 வேட்புமனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. மாற்று வேட்பாளராக திமுக விளாத்திகுளம் பேரூர் கழக செயலாளர் ஆர்.வேலுச்சாமி மனுத் தாக்கல் செய்தார். கடந்த 2019-ம் ஆண்டு மக்களவை தேர்தலின் போதும் கனிமொழிக்கு மாற்று வேட்பாளராக இவர் தான் வேட்புமனு தாக்கல் செய்தார்.
சொத்து மதிப்பு: கனிமொழி தனது வேட்புமனுவுடன் தாக்கல் செய்த பிரமாண பத்திரத்தில், தனது பெயரில் ரொக்க பணம், வங்கி கையிருப்பு, பங்குகள், பத்திரங்கள், நகைகள், கார்கள் என மொத்தம் ரூ.38,77,79,177 மதிப்பிலான அசையும் சொத்துகள், நிலங்கள், கட்டிடங்கள், வீடுகள் என, ரூ.18,54,42,000 மதிப்பிலான அசையா சொத்துகள் என, மொத்தம் ரூ.57,32,21,177 மதிப்பிலான சொத்துகள் இருப்பதாக குறிப்பிட்டுள்ளார்.
தனது கணவர் கோ.அரவிந்தன் பெயரில் ரொக்க பணம், வங்கி கையிருப்பு, பத்திரங்கள், கார் என மொத்தம் ரூ.66,21,347 மதிப்பிலான அசையும் சொத்துகள், நிலங்கள், வணிக கட்டிடம், வீடு என ரூ.2,26,31,550 மதிப்பிலான அசையா சொத்துகள் என, மொத்தம் ரூ.2,92,52,897 மதிப்பிலான சொத்துகள் இருப்பதாக குறிப்பிட்டுள்ளார். மேலும், தனது பெயரில் ரூ.60,60,187 கடன் இருப்பதாகவும் கனிமொழி தெரிவித்துள்ளார்.
2 வழக்குகள்: தன் மீது அமலாக்கத் துறை மற்றும் சிபிஐ சார்பில் தொடரப்பட்ட இரு வழக்குகளிலும் சிறப்பு நீதிமன்றம் தன்னை விடுதலை செய்துள்ளதாகவும், இதனை எதிர்த்து அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ டெல்லி உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளன. இதில் சிபிஐ மனுவுக்கு உயர் நீதிமன்றம் 22.03.2024-ல் அனுமதி அளித்துள்ளது. அமலாக்கத்துறை மேல்முறையீட்டு மனுவுக்கு இதுவரை அனுமதி அளிக்கப்படவில்லை என தனது பிரமாண பத்திரத்தில் குறிப்பிட்டுள்ளார்.
வெற்றி நிச்சயம்: பின்னர் கனிமொழி செய்தியாளர்களிடம் கூறும்போது, “தூத்துக்குடி தொகுதியில் இண்டியா கூட்டணி சார்பில் திமுக வேட்பாளராக போட்டியிட எனக்கு வாய்ப்பளித்த தமிழக முதல்வருக்கு நன்றியை தெரிவித்து கொள்கிறேன். அனைவரின் உழைப்பு இந்த தொகுதியில் எனது வெற்றி வாய்ப்பை உறுதி செய்யும் என நம்புகிறேன்” என்றார்.