கோவை: எனது தந்தை குறித்த அவதூறு பேச்சுக்கு அண்ணாமலை மன்னிப்பு கேட்க வேண்டும் என கோவை மக்களவைத் தொகுதி அதிமுக வேட்பாளர் சிங்கை ஜி.ராமச்சந்திரன் தெரிவித்தார்.
இது குறித்து அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: நான் எம்எல்ஏ ஒதுக்கீட்டில் கல்லூரியில் சேர்ந்ததாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். எனது தந்தை கோவிந்த ராஜ் உயிரிழந்த போது என்னுடைய வயது 11. நான் 18 வயதில் கல்லூரியில் சேர்ந்தேன். நான் பாலிடெக்னிக் கல்லூரியில் டிப்ளமோ படிப்பில் சிறந்த மாணவராகத் தேர்ச்சி பெற்றேன். தொடர்ந்து தனியார் தொழில் நுட்பக் கல்லூரியில் பிஇ படிக்க இடம் கிடைத்தது.
எனது தாய் கஷ்டமான சூழலில் வளர்த்தார். உயிருடன் இல்லாத எனது தந்தை குறித்து அவதூறாக பேசிய அண்ணாமலை மன்னிப்பு கேட்க வேண்டும். எனது தந்தை நல்ல அரசியல்வாதியாக இருந்து மறைந்தார். என்னைப் போல நூற்றுக்கணக்கானவர்கள் பல்வேறு சமூக சூழ்நிலைகளில் இருந்து படிக்க வந்தனர். பாஜக மாநில தலைவர் அண்ணாமலைக்கு பல ஏக்கர் நிலம் உள்ளது. ஆனால், தகர பெட்டியை எடுத்துக் கொண்டு வந்தேன் என பொய் பேசுகிறார்.
கோவை மக்களவைத் தொகுதியை பொறுத்தவரை அதிமுக - திமுக இடையே தான் போட்டி. கோவை வளர்ச்சி குறித்து விவாதிக்க தயாரா என கேட்டிருந்தேன். ஆக்கப்பூர்வமான அரசியலை முன்னெடுத்துச் செல்ல விரும்புகிறேன். இடத்துக்கு தகுந்தாற்போல அண்ணாமலை பேசி வருகிறார். பாஜக, திமுக ஆகிய இரு கட்சிகளுக்கும் ஊழலை பற்றி பேச தகுதி கிடையாது. மக்களுக்குத் தெரியாமல் தேர்தல் பத்திரங்கள் மூலம் ரூ.6 ஆயிரம் கோடி வரை திரட்டிய பாஜகவுக்கும், ரூ.600 கோடி பெற்ற திமுகவுக்கும் ஊழல் பற்றி பேச தகுதி கிடையாது.
பாஜகவின் வாகன பேரணியின் இறுதியில் 1998-ம் ஆண்டு குண்டு வெடிப்பு சம்பவத்தில் உயிரிழந்தவர்களுக்கு பிரதமர் அஞ்சலி செலுத்துவதன் மூலம் மக்களுக்கு என்ன சொல்ல வருகிறார். நாங்கள் அது போன்ற சம்பவத்தை மறக்க நினைக்கிறோம். தேர்தல் நேரத்தில், பிரித்தாளும் சூழ்ச்சியுடன் பாஜக செயல்படுகிறது. மக்களவைத் தேர்தலில் பாஜக கோவையில் மட்டுமல்ல தமிழகத்தில் வேறெங்கும் வெற்றி பெறாது. இவ்வாறு அவர் கூறினார்.