காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மக்களவைத் தொகுதியில் திமுக வெற்றி பெற்றால் அரக்கோணம் - செங்கல்பட்டு ரயில்பாதை இரட்டை வழிப்பாதையாக மாற்றப்படும் என்று இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தார்.
காஞ்சிபுரம் தேரடி சாலையில் நேற்று முன்தினம் நடைபெற்ற பிரச்சாரத்தில் அவர் பங்கேற்று பேசியது: காஞ்சிபுரம் மக்களவைத் தொகுதியில் சிறப்பாக செயல்பட்டதால் க.செல்வத்துக்கு மீண்டும் போட்டியிட கட்சி வாய்ப்புவழங்கியுள்ளது.
காஞ்சிபுரம் அரசு புற்றுநோய் மருத்துவமனை ரூ.36 கோடியில் தரம் உயர்த்தப்பட்டுள்ளது. மதுராந்தகம் ஏரி ரூ.120 கோடியில் தூர்வாரப்பட்டுள்ளது. காஞ்சிபுரம் மாநகராட்சியில் ரூ.343 கோடியில் புதை வடிகால் திட்டம் விரிவாக்கப்பட்டு வருகிறது.
காஞ்சிபுரம் மக்களவைத் தொகுதியில் திமுக வெற்றி பெற்றால் காஞ்சிபுரத்தில் மருத்துவக் கல்லூரி கொண்டுவரப்படும். அரக்கோணம்-செங்கல்பட்டு பகுதியில் இரட்டை ரயில்பாதை அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
இந்தக் கூட்டத்தில் சட்டப்பேரவை உறுப்பினர்கள் க.சுந்தர், எழிலரசன், மாநகராட்சி மேயர் மகாலட்சுமி, கட்சி நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.