திண்டுக்கல்: மத்தியில் பாரதிய ஜனதா கட்சி மீண்டும் ஆட்சிக்கு வந்தால் 100 நாள் வேலை திட்டத்தை முற்றிலும் ஒழித்துவிடும், என அமைச்சர் ஐ.பெரியசாமி பேசினார்.
ஆத்தூர் தொகுதிக்குட்பட்ட பிள்ளையார்நத்தம், ஆலமரத்துப் பட்டி, செட்டியபட்டி, காந்திகிராமம் உள்ளிட்ட கிராமங்களில் மார்க்சிஸ்ட் கட்சி வேட்பாளர் ஆர்.சச்சிதானந்தத்தை ஆதரித்து அமைச்சர் ஐ.பெரியசாமி பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது அவர் பேசியதாவது: கிராமங்களில் வறுமையை ஒழித்தது 100 நாள் வேலை திட்டம் தான். இத்திட்டம் மூலம் வேலையில்லா திண்டாட்டமும் ஒழிந்தது. ஆனால், மத்தியில் பாஜக மீண்டும் ஆட்சிக்கு வந்தால் 100 நாள் வேலை திட்டத்தை முற்றிலும் ஒழித்துவிடும்.
அதன் பின்னர், எங்கு பார்த்தாலும் பசியும் பட்டினியும் தான் இருக்கும். இந்த நிலைமை வராமல் இருக்க, தேர்தலில் மார்க்சிஸ்ட் கட்சி வேட்பாளருக்கு வாக்களிக்க வேண்டும். ஆத்தூர் மற்றும் ரெட்டியார் சத்திரம் ஒன்றியத்தில் கூட்டுறவு மற்றும் அரசு கலை கல்லூரி கொண்டு வரப்பட்டுள்ளது. இது கிராமப் புற மாணவர்களுக்கு பயனுள்ளதாக உள்ளது. வீடு இல்லாதவர்களுக்கு கலைஞர் கனவு இல்லம் திட்டம் மூலம் வீடு கட்டித் தரப்படும் என்றார். பிரச்சாரத்தில், திமுக, மார்க் சிஸ்ட் மற்றும் கூட்டணிக் கட்சி நிர்வாகிகள் பங்கேற்றனர்.