சிவகாசி: சிவகாசி பட்டாசு ஆலை அதிபர்களை, பாஜக வேட்பாளர் ராதிகா, அவரது கணவர் சரத்குமாருடன் சேர்ந்து நேரில் சந்தித்து ஆதரவு திரட்டும் பணியில் ஈடுபட்டு வருகிறனர்.
சமத்துவ மக்கள் கட்சித் தலைவர் நடிகர் சரத்குமார், மக்களவைத் தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் சேர்ந்து நிலையில், திடீர் திருப்பமாக தனது கட்சியை சரத்குமார் பாஜகவுடன் இணைத்தார். இதையடுத்து விருதுநகர் தொகுதியில் போட்டியிட சரத்குமாரின், மனைவி ராதிகாவுக்கு பாஜக தலைமை சீட் வழங்கியது. நேற்று வேட்புமனு தாக்கல் செய்த ராதிகா தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார்.
இந்நிலையில், ராதிகா தனது கணவர் சரத்குமாருடன் சிவகாசியில் உள்ள முக்கிய பட்டாசு ஆலை அதிபர்களை நேரில் சந்தித்து ஆதரவு திரட்டி வருகிறார். தமிழ்நாடு பட்டாசு மற்றும் கேப் வெடி உற்பத்தியாளர்கள் சங்கம் (டான்பாமா) தலைவர் கணேசன் உள்ளிட்ட பட்டாசு ஆலை உரிமையாளர்களை சந்தித்து ஆதரவு திரட்டினர்.
ஆண்டுக்கு ரூ.6 ஆயிரம் கோடிக்கு மேல் வர்த்தகம் நடைபெறும் பட்டாசு தொழில் மூலம் ரூ.5 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் வேலைவாய்ப்பு பெறுகின்றனர். இந்நிலையில், பட்டாசு உற்பத்தியில் பேரியம் நைட்ரேட் பயன்பாடு மற்றும் சரவெட்டிக்கு தடை, உச்ச நீதிமன்ற விதிமுறைகள் மற்றும் தொடர் விபத்துகள் காரணமாக பட்டாசு தொழில் பாதிக்கப்பட்டு வருகிறது.
சிவகாசி பாஜக அலுவலக திறப்பு விழாவில் கலந்து கொண்ட ராதிகா, பட்டாசு தொழிலை மேம்படுத்துவதுடன், உயிரிழப்புகளை தவிர்க்கவும் நடவடிக்கை எடுப்பேன் என்றார்.