கோவை: மக்களவைத் தேர்தலில் 100 சதவீத வாக்குப்பதிவின் அவசியம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், கோவை ஆட்சியர் அலுவலக வளாகத்தில் விழிப்புணர்வு பலூன் பறக்கவிடப்பட்டது. மாற்றுத் திறனாளிகள் உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர்.
எதிர்வரும் மக்களவைத் தேர்தலில் 100 சதவீத வாக்குப்பதிவை உறுதிப்படுத்த பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் தொடர்ந்து நடத்தப்பட்டு வருகின்றன. அதன் ஒரு பகுதியாக கோவை மாவட்ட தேர்தல் அலுவலர் கிராந்திகுமார் பாடி முன்னிலையில் ஆட்சியர் அலுவக வளாகத்தில் விழிப்புணர்வு பலூன் பறக்கவிடப்பட்டது. தரையிலிருந்து 125 அடி உயரத்தில் பறக்கும் வகையில் பலூன் வடிமைக்கப்பட்டுள்ளது.
முன்னதாக, ஆட்சியர் அலுவலகத்தில் பார்வை குறைபாடு கொண்ட மாற்றுத் திறனாளிகள் வாக்குப்பதிவு விழிப்புணர்வு உறுதி மொழி ஏற்றனர். இந்நிகழ்வில் மாற்றுத்திறனாளி ஒருவர் தேர்தல் விழிப்புணர்வு பாடலை பாடினார். தொடர்ந்து, மாற்றுத் திறனாளிகள் எளிதாக வாக்களிக்கும் வகையில், சாக்சம் ஆப்-பில் வழங்கப்பட்டுள்ள வசதிகள் குறித்து விளக்கப்பட்டது.
மக்களவைத் தேர்தலில் 18 வயது பூர்த்தியடைந்த அனைவரும் 100 சதவீதம் வாக்குப்பதிவு செலுத்துவதை வலியுறுத்தும் வகையில் மாவட்ட தேர்தல் அலுவலகம் சார்பில் வாக்காளர் விழிப்புணர்வு விளம்பர பதாகைகள், சுவரொட்டிகள், துண்டு பிரசுரங்கள், கையெழுத்து இயக்கங்கள், குறும்படங்கள், விழிப்புணர்வு பேரணிகள், ரங்கோலி கோலங்கள் உள்ளிட்டவை செயல்படுத்தப்பட்டு வருகின்றன.
பேருந்துகளில் பயணம் செய்தவர்களுக்கு துண்டு பிரசுரங்கள் வழங்கியும், ஆட்டோக்கள் மூலமாக ஊர்வலம் சென்றும், பொதுமக்கள் அதிக அளவில் கூடும் இடங்களில் தேர்தல் விழிப்புணர்வு தொடர்பான முழக்கங்கள் எழுப்பியும் விழிப்புணர்வு பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டது.
விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய ஸ்டிக்கர் பாரத் கேஸ் ஏஜென்சீஸ் நிறுவனத்தில் உள்ள குடோனில் சிலிண்டர்கள் மற்றும் தண்ணீர் கேன்களில் ஒட்டப்பட்டன. காரமடை நகராட்சியில் 29 வார்டுகளிலும் பொதுமக்களுக்கு தேர்தல் விழிப்புணர்வு நோட்டீஸ் வழங்கப்பட்டது.