மக்களவை தேர்தலையொட்டி, வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று வேட்புமனு தாக்கல் செய்ய அரசியல் கட்சியினர், தொண்டர்களுடன் திரண்டிருந்தனர். இந்நிலையில், வேட்புமனு தாக்கல் செய்ய வந்த அதிமுக, பாஜக கூட்டணி கட்சியினர் அங்கு முழக்கங்களை எழுப்பியதால் சலசலப்பு ஏற்பட்டது. 
தமிழகம்

பேசுபொருளான ‘யார் துரோகி’ விமர்சனம்: வேலூர் தொகுதியில் பாஜக, அதிமுகவினர் இடையே சலசலப்பு

வ.செந்தில்குமார்

வேலூர்: வேலூர் மக்களவைத் தேர்தலில் பாஜக, அதிமுகவினர் இடையே ‘யார் துரோகி ’ என்ற விமர்சனம் பேசுபொருளாகியுள்ள நிலையில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே நேற்று பாஜக, அதிமுக தொண் டர்கள் இடையே எழுந்த முழக்கங்கள் கைகலப்பாக மாற இருந்த சம்பவம் சலசலப்பை ஏற்படுத்தியது.

வேலூர் மக்களவைத் தொகுதியில் புதிய நீதிக்கட்சியின் நிறுவன தலைவர் ஏ.சி.சண்முகம் மூன்றாவது முறையாக வேட்பாளராக களம் காண்கிறார். கடந்த 2014-ம் ஆண்டில் அவர் பாஜக சின்னத் திலும், கடந்த 2019-ம் ஆண்டில் இரட்டை இலை சின்னத்திலும் போட்டியிட்டவர் இந்த தேர்தலில் பாஜக சின்னத்தில் மீண்டும் போட்டியிடுகிறார்.

கடந்த 2014 தேர்தலில் சுமார் 20 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்திலும், கடந்த தேர்தலில் சுமார் 7 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்திலும் ஏ.சி.சண்முகம் தோல்வி அடைந்தார். இந்த முறை எப்படியாவது வெற்றிபெற வேண்டும் என்பதற்காக கடந்த 7 மாதங்களுக்கு முன்பாகவே வேலூர் மக்களவைத் தொகுதியில் ஏ.சி.சண்முகம் பிரச்சார பணிகளை தொடங்கி நடத்தி வருகிறார்.

இதற்கிடையில், தமிழ்நாட்டில் பாஜகவின் முதல் தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டமாக வேலூர் மாவட்டம் பள்ளிகொண்டா அருகே நடைபெற்ற கூட்டத்தில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பங்கேற்று பேசினார். அந்த கூட்டத்தில் பேசிய புதிய நீதிக்கட்சியின் தலைவர் ஏ.சி.சண்முகம், கடந்த 2019-ம் ஆண்டு தேர்தலில் கூட்டணி கட்சியைச் சேர்ந்த சிலர் தனது முதுகில் குத்தி விட்டதால் தோல்வியடைந்ததாக வெளிப் படையாக கூறினார்.

இது தேர்தலுக்கு முன்பாகவே அதிமுகவினர் மத்தியில் மனக்கசப்பை ஏற்படுத்தியது. இதன் தொடர்ச்சியாக பாஜக, அதிமுக தனித்து போட்டியிடுவது என முடிவான நிலையில் தனது முதுகில் குத்தியது அதிமுக முன்னாள் அமைச்சர் கே.சி.வீரமணி என்பதை வெளிப்படையாக ஏ.சி.சண்முகம் தெரிவித்தார். இது அதிமுகவினர் மத்தியில் பெரியளவில் சலசலப்பை ஏற்படுத்தியது.

ஏ.சி.சண்முகத்தின் இந்த பேச்சுக்கு எதிர்வினை ஆற்றும் வகையில் வேலூரில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு நடைபெற்ற அதிமுக வேட்பாளர் அறிமுக கூட்டத்தில் பேசிய முன்னாள் அமைச்சர் கே.சி.வீரமணி, ‘‘ஏ.சி.சண்முகம் வெற்றிக்கு இரவு, பகலாக போராடிய எங்களையா முதுகில் குத்திய துரோகி என்கிறார்.

அவருக்கு முதுகில் குத்துவது எப்படி என்று இந்த தேர்தலில் காட்டப்போகிறோம். அவரை தோற்கடித்தது அன்றைய பாஜக அரசு கொண்டுவந்த காஷ்மீர் சிறப்பு சட்டம் ரத்துதான் காரணம். பாஜகதான் அவரது முதுகில் குத்தியது’’ என காட்டமாகவே பேசினார்.

வேலூர் மக்களவைத் தொகுதியில் ‘யார் முதுகில் குத்திய துரோகி’ பிரச்சினை கடந்த இரண்டு நாட்களாகவே அதிமுக, பாஜகவினர் இடையே மீண்டும், மீண்டும் பேசப்பட்டு வரும் நிலையில் நேற்று மனுத்தாக்கல் சமயத்திலும் ‘யார் துரோகி’ முழக்கம் எதிரொலித்தது. பாஜக, அதிமுக வேட்பாளர்கள் வேட்பு மனுத்தாக்கல் செய்ய காத்திருந்த நிலையில் ஆட்சியர் அலுவலகம் அருகே இரண்டு கட்சி தொண்டர்களும் ஏராளமானவர்கள் திரண் டிருந்தனர்.

நேற்று பகல் 12 மணியளவில் பாஜக வேட்பாளராக ஏ.சி.சண்முகம் மனுத்தாக்கல் செய்த பிறகு காரில் புறப்பட்டு சென்றார். அப்போது, ஆட்சியர் அலுவல கத்துக்கு வெளியே காத்திருந்த அதிமுக, பாஜக தொண்டர்கள் ‘யார் துரோகி’ என்ற விமர்சனம் முழக்கங்களாக மாறின. ஒரு கட்டத்தில் தொண்டர்கள் இடையே கைகலப்பு உருவாகும் சூழல் ஏற்பட்டது.

உடனடியாக அங்கிருந்த காவல் துறையினர் இரண்டு தரப்பினரையும் தனித்தனியாக பிரித்து சமாதானம் செய்ததுடன், ஏ.சி.சண்முகம் மற்றும் அவரது உடன் வந்தவர்கள் காரை பத்திரமாக அனுப்பி வைத்தனர். இதனால், அங்கு சிறிது நேரம் சலசலப்பு ஏற்பட்டது.

இந்த தேர்தலில் பாஜக, அதிமுகவினர் இடையே ‘யார் துரோகி’ என்ற விமர்சனம் வரும் நாட்களிலும் தொடரும் என எதிர் பார்க்கப்படுகிறது. இது அதிமுக, பாஜக தொண்டர்கள் மத்தியில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஆட்சியர் அலுவலகத்துக்கு வெளியே காத்திருந்த அதிமுக, பாஜக தொண்டர்கள் ‘யார் துரோகி’ என்ற விமர்சனம் முழக்கங்களாக மாறின. ஒரு கட்டத்தில் தொண்டர்கள் இடையே கைகலப்பு உருவாகும் சூழல் ஏற்பட்டது.

SCROLL FOR NEXT