பொள்ளாச்சி சார்ஆட்சியர் அலுவலகத்தில், உதவி தேர்தல் நடத்தும் அலுவலரும், சார்ஆட்சியருமான கேத்தரின் சரண்யாவிடம் வேட்புமனு தாக்கல் செய்த திமுக வேட்பாளர் கே.ஈஸ்வரசாமி. 
தமிழகம்

பொள்ளாச்சி திமுக, அதிமுக, வேட்பாளர்களின் சொத்து மதிப்பு என்ன?

செய்திப்பிரிவு

பொள்ளாச்சி: பொள்ளாச்சி சார்ஆட்சியர் அலுவலகத்தில் உதவி தேர்தல் நடத்தும் அலுவலரிடம் நேற்று திமுக, அதிமுக, பகுஜன்சமாஜ் கட்சி, ஒரு சுயேச்சை வேட்பாளர் என மொத்தம் 4 வேட்பாளர்கள் மனு தாக்கல் செய்தனர்.

பொள்ளாச்சி மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர்கள், பொள்ளாச்சி சார்ஆட்சியர் அலுவலகம், கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வேட்பு மனு தாக்கல் செய்து வருகின்றனர்.

நேற்று சார்ஆட்சியர் அலுவலகத்தில் உதவி தேர்தல் நடத்தும் அலுவலரும், சார்ஆட்சியருமான கேத்தரின் சரண்யாவிடம், திமுக வேட்பாளர் கே.ஈஸ்வரசாமி தனது ஆதரவாளர்களுடன் வேட்பு மனு தாக்கல் செய்தார்.

அப்போது, முன்னாள் எம்எல்ஏ ஜெயராமகிருஷ்ணன், திருப்பூர் தெற்கு மாவட்ட திமுக செயலாளர் இல.பத்மநாபன், கோவை வடக்கு மாவட்ட திமுக செயலாளர் ரவி ஆகியோர் உடனிருந்தனர்.

கே.ஈஸ்வரசாமி தனது வேட்பு மனுவுடன், சொத்து மதிப்பு பட்டியலையும் தாக்கல் செய்தார். அதில், அசையும் சொத்து மதிப்பு ரூ.3 கோடியே 46 லட்சத்து 13 ஆயிரத்து 532, அவரது மனைவி பெயரில் ரூ.1 கோடியே 33 லட்சத்து 13 ஆயிரத்து 425 என தெரிவித்துள்ளார். கே.ஈஸ்வரசாமியின் பெயரில் அசையா சொத்துகளின் மொத்த மதிப்பு ரூ.17 கோடியே 91 லட்சத்து 50 ஆயிரம் என தெரிவித்துள்ளார்.

வேட்புமனு தாக்கல் செய்த அதிமுக வே ட்பாளர் அ.கார்த்திகேயன்.

அதிமுக வேட்பாளர் அ.கார்த்திகேயன், தனது ஆதரவாளர்களுடன் வேட்பு மனு தாக்கல் செய்தார். அப்போது எம்எல்ஏக்கள் பொள்ளாச்சி வி.ஜெயராமன், செ.தாமோதரன், உடுமலை ராதாகிருஷ்ணன், சி.மகேந்திரன் ஆகியோர் உடனிருந்தனர்.

அதிமுக வேட்பாளரின் அசையும் சொத்து மதிப்பு ரூ.27 லட்சத்து 13 ஆயிரத்து 745 எனவும், தனது மனைவி பெயரில் அசையும் சொத்து ரூ.1 கோடியே 11 லட்சத்து 57 ஆயிரத்து 635 எனவும், அசையா சொத்தாக பூர்வீக சொத்து மதிப்பு தனது பெயரில் ரூ.1 கோடியே 38 லட்சத்து 51 ஆயிரம் எனவும், தனது மனைவி சாந்தி பெயரில் 2 கோடியே 19 லட்சத்து 50 ஆயிரம் உள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

பகுஜன் சமாஜ் கட்சி வேட்பாள ர் டெபாசிட் செலுத்திய 10 ரூபாய்
நாணயங்களை சரிபார்க்கும் தேர்தல் பணியாளர்கள் .

இதுபோல் பகுஜன் சமாஜ் கட்சி வேட்பாளர் பெஞ்சமின் கிருபாகரனும், சுயேச்சை வேட்பாளர் ஜமீன் கோட்டாம்பட்டியை சேர்ந்த காளிமுத்து ஆகியோர் வேட்புமனு தாக்கல் செய்தனர்.

பகுஜன் சமாஜ் கட்சி வேட்பாளர் பெஞ்சமின் கிருபாகரன், டெபாசிட் தொகையான ரூ.25 ஆயிரத்தை, பத்து ரூபாய் நாணயங்களாக செலுத்தினார்

SCROLL FOR NEXT