ராமநாதபுரம்: ராமநாதபுரம் தொகுதியில் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் பெயரில் உள்ள மற்றொருவரும் சுயேச்சையாக களமிறங்கியுள்ளார்.
ராமநாதபுரம் மக்களவைத் தொகுதியில் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் பாஜக கூட்டணி சார்பில் சுயேச்சையாக களமிறங்குகிறார். அவர், தனது ஆதரவாளர்களுடன் நேற்று வந்து வேட்புமனு தாக்கல் செய்தார்.
அதனையடுத்து சுயேச்சை வேட்பாளராக மதுரை மாவட்டம் உசிலம்பட்டி தாலுகா மேக்கிழார்பட்டியைச் சேர்ந்த ஒச்சப்பன் மகன் பன்னீர்செல்வம் (ஓ.பன்னீர்செல்வம்) என்பவர் வேட்புமனு தாக்கல் செய்தார்.
முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் பெயரில் குழப்பம் ஏற்படுத்த இது போன்று மற்றொருவர் மனு தாக்கல் செய்திருக்கலாம் என ஓபிஎஸ் ஆதரவாளர்கள் தெரிவித்தனர்.
இந்நிலையில், முதுகுளத்தூர் வட்டம் கீழக்குளம் கிராமத்தைச் சேர்ந்த முத்து மகன் இருளாண்டி (37), கள்ளக்குளத்தைச் சேர்ந்த சதுரகிரி ஆகியோரும் நேற்று சுயேச்சை வேட்பாளர்களாக தங்களின் வேட்புமனுவை தாக்கல் செய்தனர்.