கிருஷ்ணகிரியில் செய்தியாளர்களை சந்தித்த தமிழக பாஜக மேலிட இணைப் பொறுப்பாளர் சுதாகர் ரெட்டி. உடன் கட்சி நிர்வாகிகள். 
தமிழகம்

மக்களவைத் தேர்தலில் 370 இடங்களில் உறுதியாக வெற்றி பெறுவோம்: பாஜக மேலிட இணை பொறுப்பாளர் தகவல்

செய்திப்பிரிவு

கிருஷ்ணகிரி: மக்களவைத் தேர்தலில் 370 இடங்களில் உறுதியாக வெற்றி பெறுவோம் என தமிழக பாஜக மேலிட இணைப் பொறுப்பாளர் சுதாகர் ரெட்டி தெரிவித்தார்.

இதுதொடர்பாக கிருஷ்ணகிரியில் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:

காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை மோடி அலை வீசுகிறது. இதனால், மக்களவைத் தேர்தலில் 370 இடங்களில் உறுதியாக வெற்றிபெறுவோம். ஏனெனில், நாட்டின் சிறந்த திட்டங்களான 500 ஆண்டுகள் பிரச்சினைகளை தீர்த்து ராமர் கோயில் கட்டியது, 370 சிறப்புச் சட்டத்தை நீக்கியது உள்ளிட்ட திட்டங்களை செயல்படுத்தியதால் சிறந்த தலைவராக மோடி வளர்ந்துள்ளார். உலக தலைவர்களிடையே மதிக்கும் தலைவராக மோடி திகழ்கிறார்.

தமிழகத்தில் திராவிட மாடல் என சொல்லிக்கொள்ளும் திமுக அரசு, சட்டப்பேரவை தேர்தலில் அறிவித்த 520 வாக்குறுதிகளில், 200 வாக்குறுதிகளைக் கூட செயல்படுத்தவில்லை. திமுக ஆட்சியால் மக்கள் விரக்தியடைந்துள்ளனர். திமுக அமைத்துள்ள இண்டியா கூட்டணி தலைவர்கள் ஜெயிலில் இருந்து பெயில், பெயிலில் இருந்து ஜெயில் என இருந்து வருகின்றனர்.

மக்களே எஜமானர்கள்: எங்களுடன் கூட்டணியில் இருந்தவர்கள் நான்கரை ஆண்டு தமிழகத்தில் ஆட்சி செய்தவர்கள், தற்போது எங்களிடமிருந்து பிரிந்துள்ளனர். ஆனால் பொதுமக்கள் தான் எஜமானர்கள். தமிழகத்துக்கு யார் தேவை என்பதை அவர்கள் முடிவு செய்வார்கள்.

இந்திய அரசியலைமைப்புச் சட்டத்தை அமைச்சர் உதயநிதி தெரிந்து கொள்ள வேண்டும். மத்திய, மாநில அரசுகளுக்கு இடையேயான உறவு குறித்து தெரிந்து கொள்ள வேண்டும். சனாதன தர்மம் குறித்து மக்களிடையே வெறுப்புணர்வைத் தூண்டி, வாக்குகளைப் பெற நினைக்கிறார். தேர்தலுக்குப் பின்னர் மத்தியில் பாஜக மீண்டும் வலுவான ஆட்சி அமைக்கும்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

பேட்டியின்போது, கிருஷ்ணகிரி மக்களவைத் தொகுதி பாஜக வேட்பாளர் நரசிம்மன், மாவட்ட தலைவர்கள் சிவபிரகாசம், நாகராஜ் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

SCROLL FOR NEXT