தமிழகம்

சென்னையில் விறுவிறுப்பாக நடைபெற்ற வேட்புமனு தாக்கல்: ஒரே நாளில் முக்கிய கட்சிகள் தாக்கல் செய்ததால் பரபரப்பு

செய்திப்பிரிவு

சென்னை: சென்னை மாவட்டத்தில் உள்ள 3 மக்களவை தொகுதிகளில் நேற்று விறுவிறுப்பாக வேட்புமனு தாக்கல் நடைபெற்றது. முக்கியக் கட்சிகள் ஒரே நாளில் வேட்புமனு தாக்கல் செய்ததால் தேர்தல் நடத்தும் அலுவலர் அலுவலகங்களில் பரபரப்பு நிலவியது.

சென்னை மாவட்டத்தில் வட சென்னை, மத்திய சென்னை, தென் சென்னை என 3 மக்களவை தொகுதிகள் இடம்பெற்றுள்ளன. இத்தொகுதிகளுக்கு, கடந்த 20-ம் தேதி முதல் வேட்புமனு தாக்கல் நடைபெற்று வருகிறது.

நேற்று பங்குனி உத்திரம் நல்ல நாள் என்பதால் பல்வேறு கட்சி வேட்பாளர்கள் நேற்று ஆர்வத்துடன் வந்து வேட்புமனு தாக்கல் செய்தனர். இதனால் தேர்தல் நடத்தும் அலுவலர் அலுவலகங்களில் நேற்று பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு பரபரப்பு நிலவியது.

வட சென்னை மக்களவை தொகுதி வேட்புமனு தாக்கல் மூலக்கொத்தளம் பகுதியில் உள்ள மாநகராட்சியின் வடக்கு வட்டார துணை ஆணையர் அலுவலகத்தில் நடைபெற்றது. தேர்தல் நடத்தும் அலுவலர் கட்டா ரவி தேஜா வேட்பு மனுக்களைப் பெற்றார். அதிமுக சார்பில் ராயபுரம் மனோ வேட்புமனு தாக்கல் செய்தார். அவருடன் முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார், மாவட்டச் செயலாளர்கள் ஆர்.எஸ்.ராஜேஷ், டி.ஜி.வெங்கடேஷ்பாபு உள்ளிட்டோர் வந்திருந்தனர்.

திமுக சார்பில் கலாநிதி வீராசாமிவேட்புமனு தாக்கல் செய்தார். அவருடன் அமைச்சர் பி.கே.சேகர்பாபு, எம்எல்ஏக்கள் ஆர்.டி.சேகர்,தாயகம் கவி, கட்சியின் தலைமைசெயற்குழு உறுப்பினர் இளையஅருணா உடனிருந்தனர்.

பாஜக சார்பில் பால் கனகராஜ் வேட்புமனு தாக்கல் செய்தார். அவருடன் பாஜக மாநிலச் செயலாளர் சதீஷ்குமார், மாநில செய்தித் தொடர்பாளர் ஏ.என்.எஸ்.பிரசாத் உள்ளிட்டோர் வந்திருந்தனர்.

மத்திய சென்னை மக்களவை தொகுதி வேட்புமனு தாக்கல் அண்ணா நகரில் உள்ள மாநகராட்சியின் மத்திய வட்டார துணை ஆணையர் அலுவலகத்தில் நடைபெற்றது.

பாஜக சார்பில் அக்கட்சியின் இளைஞரணி மாநிலச் செயலாளர் வினோஜ் பி.செல்வம் நேற்று, தேர்தல் நடத்தும் அலுவலர் கே.ஜே.பிரவீன் குமாரிடம் வேட்புமனு தாக்கல் செய்தார். அப்போது, பாஜக மாநிலச் செயலாளர் சுமதி வெங்கடேசன், மாவட்ட தலைவர் விஜய் ஆனந்த் ஆகியோர் உடனிருந்தனர்.

தேமுதிக சார்பில் முன்னாள் எம்எல்ஏ ப.பார்த்தசாரதி வேட்பு மனு தாக்கல் செய்தார். அப்போது அதிமுக அவைத் தலைவர் தமிழ்மகன் உசேன், முன்னாள் எம்.பி.பாலகங்கா உடனிருந்தனர்.

இவர்கள் தவிர, பகுஜன் சமாஜ் கட்சி சார்பில் சமரன், சுயேச்சை வேட்பாளர்கள் இஸ்மாயில் கனி, ராமன், முகமது நிலாவர் அலி ஆகியோரும் மனுத்தாக்கல் செய்துள்ளனர். திமுக சார்பில் போட்டியிடும் தயாநிதி மாறன் நாளை (மார்ச் 27) வேட்புமனு தாக்கல் செய்கிறார்.

தென் சென்னை மக்களவை தொகுதி வேட்புமனு தாக்கல் சென்னை அடையாரில் உள்ள தென் சென்னை மாநகராட்சி வட்டாரதுணை ஆணையர் அலுவலகத்தில் நடைபெற்றது. அதிமுக சார்பில் ஜெ.ஜெயவர்தன், தேர்தல் நடத்தும் அலுவலர் எம்.பி.அமித்திடம் வேட்புமனு தாக்கல் செய்தார்.

அவருடன் அவரது தாயார் ஜெயகுமாரி, முன்னாள் அமைச்சர் கோகுல இந்திரா, மாவட்டச் செயலாளர்கள் எம்.கே.அசோக், கே.பி.கந்தன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

அதைத் தொடர்ந்து திமுக சார்பில் தமிழச்சி தங்கபாண்டியன் வேட்புமனு தாக்கல் செய்தார். அவருடன் அவரது கணவர் சந்திரசேகர், காங்கிரஸ் மாவட்ட தலைவர்முத்தழகன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாவட்டச் செயலாளர் ஆர்.வேல்முருகன், மதிமுக தென் சென்னை மாவட்ட பொருளாளர் துரை குணசேகரன் ஆகியோர் வந்திருந்தனர். பாஜக சார்பில், தெலங்கானா முன்னாள் ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் வேட்புமனு தாக்கல் செய்தார்.

சென்னை மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் வட சென்னையில் 13 பேர், தென் சென்னையில் 17 பேர், மத்திய சென்னையில் 7 பேர் என மொத்தம் 37 பேர் வேட்புமனு தாக்கல் செய்தனர். இதுவரை 57 பேர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர்.

SCROLL FOR NEXT