சென்னை: தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி சார்பில் மத்திய சென்னை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் செயல் வீரர்கள் கூட்டம், சென்னை ராயப்பேட்டை எம்.எஸ்.மஹாலில் நேற்று நடைபெற்றது. இந்த கூட்டத்துக்கு மத்திய சென்னை கிழக்கு மாவட்ட தலைவர் சிவ.ராஜசேகரன் தலைமை தாங்கினார்.
கூட்டத்தில் மத்திய சென்னை திமுக வேட்பாளர் தயாநிதிமாறன், திமுக மாவட்ட செயலாளர் நே.சிற்றரசு, பகுதி செயலாளர் மதன் மோகன், காங்கிரஸ் ஊடகப் பிரிவு மாநில தலைவர் ஆனந்த் சீனிவாசன், லட்சுமி ராமச்சந்திரன், எஸ்.கே.நவாஸ் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள், வாக்குச்சாவடி முகவர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் மத்திய சென்னை திமுக வேட்பாளரான தயாநிதிமாறனுக்கு, காங்கிரஸ் மாவட்ட தலைவர் சிவ.ராஜசேகரன் ‘மாமனிதர் நேரு’ புத்தகத்தை வழங்கினார். ‘‘வாக்குச்சாவடி முகவர்கள், நிர்வாகிகள் அனைவரும் ஒருங்கிணைந்து அந்தந்த பகுதிகளில் தீவிரமாக பணியாற்ற வேண்டும்.
மேலும், நிர்வாகிகள் அனைவரும் வீதி வீதியாக சென்று மக்களிடம் மோடிக்கு எதிராக பிரச்சாரங்கள் மேற்கொண்டு வாக்கு சேகரிக்க வேண்டும். மேலும், பாஜகவை வீழ்த்த `இண்டியா' கூட்டணி வலுப்பெற வேண்டும்’’ என நிர்வாகிகளுக்கு சிவ.ராஜசேகரன் அறிவுறுத்தினார்.