விழுப்புரம்: விழுப்புரம் மக்களவைத் தொகுதி பாமக வேட்பாளர் முரளி சங்கரை ஆதரித்து நேற்று மாலை விழுப்புரத்தில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில், பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் சிறப்புரையாற்றியது, காந்தி கூறிச் சென்ற சுதந்திரம் இன்னமும் கூட நமக்கு கிடைக் கவில்லை. தமிழகத்தில் 370 சாதிகள் உள்ளன.
அவர்களுக்குள் சமநிலை இல்லா சமுதாயம் நிலவுகிறது. சுதந்திரம் பெற்று 77 ஆண்டுகள் கடந்தும், இனியும் இது தொடரலாமா? இவற்றையெல்லாம் மாற்ற மக்களவையில் வலியுறுத்தி நம் வேட்பாளர் முரளி சங்கர் பேச உள்ளார். விழுப்புரம் மாவட்டத்தை படிப்படியாக உயர்த்துவதற்கான திட்டங்கள் உள்ளன.
காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில் இருந்தே மாநிலங்களுக்கு உள்ள அதிகாரங்கள் பறிக்கப்பட்டன. நகராட்சிக்கு உள்ள அதிகாரம் கூட மாநிலங்களுக்கு இல்லை. இப்படி இருக்கும்போது எப்படி வளர்ச்சி கிடைக்கும்?
8-வது அட்டவணையில் உள்ள22 தேசிய மொழிகள் அந்தந்த மாநிலங்களில் பயிற்று மொழியாக, ஆட்சி மொழியாக இருக்க வேண்டும். விவசாயிகள் முன்னேற்றத்திற்காக 19 வேளாண் நிழல் நிதிநிலை அறிக்கைகளை பாமக சார்பில் வெளியிட்டுள்ளோம். அதில் விவசாயி களுக்கான நன்மைகளை பட்டிய லிட்டுள்ளோம்.
படித்த இளைஞர் வேலை இல்லாமல் ஒரு குடும்பத்தில் கூட இருக்கக்கூடாது. ஒரு சொட்டு மது இல்லாத தமிழகத்தை உருவாக்க வேண்டும். இவற்றை யெல்லாம் மக்க ளவையில் முரளி சங்கர் பேசாமல் இருந்தால் அவருக்கு நான் சரியான தண்டனை அளிப்பேன். நமது வேட்பாளர் பதவி சுகத்தை அனுபவிக்க மாட்டார். நான் பதவி சுகத்தை அனுபவித்தது இல்லை. இவர் கூட்டணி கட்சிகளின் எம்.பியாக இருக்கமாட்டார். மக்களுக்காக பாடுபடுவார். பட்டியலின மக்களுக்காக முரளி சங்கர் அயராது பாடுபடவேண்டும் என்றார்.
இக்கூட்டத்தில் மயிலம் எம்எல்ஏ சிவகுமார், பாஜக மாநிலத்துணைத் தலைவர் ஏ.ஜி.சம்பத், மாவட்டத் தலைவர் கலிவரதன், பாமக மாவட்டத்தலைவர் தங்கஜோதி, தமாகா மாவட்டத்தலைவர் தசரதன்மற்றும் கூட்டணிக்கட்சி நிர்வாகிகள் பங்கேற்றனர்.
வேட்பாளர் முரளி சங்கர் தனக்கு தெரிந்த தமிழ், ஆங்கிலம், தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி ஆகிய மொழிகளில் சரளமாக பேசி வாக்கு சேகரித்தார்.
திடீர் சலசலப்பு: மேடையில் மருத்துவர் ராமதாஸ் பேசும் முன் ஐஜேகே மாநில இளைஞர் சங்க செயலாளர் அறிவு ஆதவன் தன் ஆதரவாளர்கள் சுமார் 100 பேருடன் மேடையை நோக்கி வந்ததால் கூட்டத் தினிடையே சலசலப்பு ஏற்பட்டது. மேலும் அவர்கள் ராமதாஸ் அருகில் நின்று புகைப்படம் எடுத்துக்கொண்டனர். இவர் மீது பல்வேறு குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளது.